தமிழ்நாடு

14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

17th Sep 2020 04:08 AM

ADVERTISEMENT


சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (செப்.17) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது:

ஆந்திர கடற்கரை மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது, தற்போது ஆந்திரம் மற்றும் தெலங்கானா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக நீடிக்கின்றது. இதன் காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (செப்.17) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றார் அவர்.

ADVERTISEMENT

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த  கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 50 மி.மீ., திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி, நீலகிரி மாவட்டம் ஹாரிசன் எஸ்டேட்டில் தலா 40 மி.மீ., சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம், திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தலா 30 மி.மீ., ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம், மதுரை மாவட்டம் சிட்டாம்பட்டி, கோயம்புத்தூர் மாவட்டம் சோலையாறில் தலா 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 
மீனவர்களுக்கு எச்சரிக்கை: மன்னார் வளைகுடா, தென்மேற்கு, தென்கிழக்கு, மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செப்டம்பர் 19-ஆம் தேதிவரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, கேரளம், கர்நாடகம், லட்சத்தீவு பகுதிகளுக்கு செப்டம்பர் 20-ஆம் தேதிவரை செல்லவேண்டாம்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் உயர்அலை: தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை வியாழக்கிழமை (செப்.17) இரவு 11.30 மணி வரை கடல்அலை 3.0 மீட்டர் முதல் 3.8 மீட்டர் வரை எழும்பக்கூடும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT