தமிழ்நாடு

நடப்பாண்டில் 50,000 இலவச விவசாய மின் இணைப்புகள்: அமைச்சர் தங்கமணி

17th Sep 2020 03:17 PM

ADVERTISEMENT

 

நடப்பாண்டில் (2020-21)ல் விவசாயிகளின் நலன் கருதி 50,000 இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி இன்று மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் விவசாய மின் இணைப்பு வழங்கல் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் அவர்கள் தத்கல் முறையில் விவசாய மின் இணைப்பு இவ்வாண்டு வழங்குவதற்கான கீழ்காணும் அறிவிப்பினை அமைச்சர் வெளியிட்டார்.

ADVERTISEMENT

அதில், விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலிலுள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விவசாய மின் இணைப்பு பெரும் வகையில் விரைவு (தத்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டம், இந்த ஆண்டும், சட்டசபையில் அறிவித்தபடி நடைமுறைபடுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் 5 குதிரைத்திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம், 7.5 குதிரைத்திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூபாய் இரண்டு இலட்சத்து எழுபத்தைந்தாயிரம், 10 குதிரைத்திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூபாய் மூன்று இலட்சம் மற்றும் 15 குதிரைத்திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூபாய் நான்கு இலட்சம் வீதம், ஒரு முறை கட்டணம் செலுத்தும் 25,000 விண்ணப்பதாரர்களுக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும். 

இத்திட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், தங்களுடைய பகுதி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி 21.09.2020 முதல் 31.10.2020 வரை தொகையை செலுத்தி தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், 31.10.2020 வரை பதிவு செய்யப்படும் விண்ணப்பங்களும் இத்திட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்படும்.

இதுதவிர, சாதாரண வரிசை முன்னுரிமையில் 31.03.2003 வரை பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு இலவச விவசாய மின் இணைப்புகளும், மேலும் சாதாரண வரிசை முன்னுரிமையில் 01.04.2003 முதல் 31.03.2004 வரை பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களுள் 1000 விண்ணப்பங்களுக்கு திருத்தப்பட்ட சுயநிதி திட்டம் ரூ.10,000/- த்தின் கீழ் இலவச விவசாய மின் இணைப்புகளும், ஆக மொத்தம் 25,000 இலவச விவசாய மின் இணைப்புகள் சாதாரண வரிசை மற்றும் திருத்தப்பட்ட சுயநிதி திட்டங்களின் கீழ் சட்டசபையில் அறிவித்தபடி நடப்பாண்டில் வழங்கப்படும். ஆக, நடப்பாண்டில் (2020-21)ல் விவசாயிகளின் நலன் கருதி 50,000 இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT