தமிழ்நாடு

திருப்பூரில் விவசாயிகளின் காத்திருப்புப் போராட்டம் வாபஸ்

15th Sep 2020 05:40 PM

ADVERTISEMENT

 

திருப்பூரில் ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பினருடன் கோட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக செவ்வாய்க்கிழமை வாபஸ் பெறப்பட்டது.

கோவை இருகூர் முதல் பெங்களூர் தேவனகொந்தி வரை பாரத் பெட்ரோலியத்தின் ஐடிபிஎல் எண்ணெய்க்குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தை விவசாய நிலங்களில் செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 6 மாவட்டங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை முதல் நடைபெறும் என்று ஐடிபிஎல் திட்த்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர். 

இதுதொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பினருடன் கோட்டாட்சியர் கவிதா திங்கள்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து, திருப்பூரை அடுத்த கருங்காளிபாளையத்தில் ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் போராட்டத்தைத் தொடங்கினர். 

ADVERTISEMENT

இதனிடையே, போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு சென்ற கோட்டாட்சியர் கவிதா தலைமையிலான அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஐடிபிஎல் திட்டத்தை விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் சாலையோரங்களில் செயல்படுத்தவும், அதுவரையில் இந்தத்திட்டத்துக்கு தடை விதிக்க அரசுக்கு பரிந்துரைப்பதாகவும் உறுதியளித்தனர். 

மேலும், நடப்பு சட்டப்பேரவைத் தொடரிலேயே இது குறித்து விவாதிக்க பரிந்துரைக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.  இதன் பேரில் விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் ஏடிஎஸ்பி ஜெயசந்திரன், டிஎஸ்பி ஸ்ரீராமச்சந்திரன், திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் சுந்தரம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்குரைஞர் மு.ஈசன், தலைவர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் குமார், உழவர்  உழைப்பாளர் கட்சி மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சண்முகசுந்தரம், பொங்கலூர் ஒன்றிய தலைவர் வழக்குரைஞர் குமார், கண்டியன்கோவில் ஊராட்சி தலைவர் கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT