தமிழ்நாடு

ஊழியருக்கு கரோனா: திருப்பூரில் டாஸ்மாக் கடை மூடல்

15th Sep 2020 02:31 PM

ADVERTISEMENT


திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்தக் கடை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதன்படி கடந்த திங்கள்கிழமை வரையில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,938 ஆக உள்ளது. இந்த நிலையில், திருப்பூர் தென்னம்பாளையம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வரும் 43 வயது நபர் கடந்த சில நாள்களுக்கு முன்பாக புதுக்கோட்டைச் சென்றுள்ளார். 

இதன் பிறகு இரு நாள்களுக்கு முன்னர் பணிக்குத் திரும்பிய அவருக்கு காய்ச்சல், சளி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், தென்னம்பாளையம் டாஸ்மாக் கடையில் மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கிருமி நாசினி தெளித்தனர். மேலும், கடையில் பணியாற்றி வரும் இருவருக்குப் பரிசோதனை நடத்தியதுடன், செவ்வாய், புதன்கிழமை என 2 நாள்களுக்கு டாஸ்மாக் கடையை மூடவும் உத்தரவிட்டனர்.  

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT