தமிழ்நாடு

இடப்பற்றாக்குறையால் சாலையில் நெல் குவியல்கள்

10th Sep 2020 01:39 AM | வி.என்.ராகவன்

ADVERTISEMENT


தஞ்சாவூர்: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடம் இல்லாத காரணத்தால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் பெரும்பாலும் சாலையோரங்களிலும், வீதிகளிலும் குவியல், குவியல்களாகக் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. 
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த காலங்களில் ஆண்டுக்கு சராசரியாக 3 லட்சம் முதல் 4 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும். நிகழாண்டு இதுவரை இலக்கை விஞ்சி 7.40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல,  திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் இயல்பான அளவையும் விஞ்சி நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இப்பருவத்தில் நெல் கொள்முதல் 28 லட்சம் டன்களை கடந்துவிட்டது.
டெல்டா மாவட்டங்களிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் வரத்து அதிகமான நிலையில், அதற்கேற்ப இடவசதி இல்லை. இதனால், பெரும்பாலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்,  நிலைய வளாகத்திலுள்ள திறந்தவெளியிலும், நிலையத்துக்கு வெளியே வீதியிலும், முதன்மைச் சாலையிலும் குவியல், குவியல்களாகக் கொட்டி வைக்கப்படுகின்றன.
நிகழ் கொள்முதல் பருவத்தில் (அக்டோபர் முதல் செப்டம்பர்) சம்பா, கோடை நெல் சாகுபடி முடிந்து தற்போது குறுவை நெல்லும் அறுவடையாவதால், சில நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் வரத்தும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நிலையத்திலும் ஆயிரம் மூட்டைகள் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சில நிலையங்களில் ஆயிரத்தைக் கடந்து கிட்டத்தட்ட 2,000 மூட்டைகள் அளவுக்கு நெல் வரத்து இருக்கிறது. இதுவே நிலையங்களில் வளாகத்துக்குள்ளும், வெளியிலும் நெல் குவியல்கள் பல மீட்டர் தொலைவுக்குக் குவிக்கப்பட்டுக் கிடப்பதற்குக் காரணம்.
இப்படியொரு நிலைமை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக நெல் கொள்முதல் நிலையங்களில் டோக்கன் முறை அறிமுகம் செய்யப்பட்டது. டோக்கனில் குறிப்பிடப்படும் நாளுக்கு முதல்நாள் நெல்லை நிலையங்களுக்குக் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 
ஆனால், பெரும்பாலான விவசாயிகளிடம் அறுவடை செய்த நெல்லை காய வைக்கவோ, கொட்டி வைத்து பாதுகாக்கவோ இட வசதி இல்லை. இதற்காகக் கிராமத்தில் பொது இடமும் இல்லை. எனவே, நெல் அறுவடை செய்யும் விவசாயிகள் நேரடியாகத் தங்களது பகுதியிலுள்ள கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டு வந்துவிடுகின்றனர். 
நிலையத்திலும் இடவசதி இல்லாததால், நெல் குவியல்களைத் திறந்தவெளியில் வைக்க வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. நெல்லில் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தால், காயும் வரை விவசாயிகள் நிலையத்திலேயே சில நாள்களுக்கு இரவும், பகலுமாகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதனிடையே, மழை பெய்தால் திறந்த வெளியில் கிடக்கும் நெல்மணிகள் நனைந்து வீணாகும் நிலையும் ஏற்படுகிறது. தார்பாயை கொண்டு மூடினாலும், முழுமையான பாதுகாப்பு இருப்பதில்லை. இதனால், நெல்லில் ஈரப்பதம் மேலும் அதிகமாகிவிடுகிறது. பின்னர், வெயிலில் காய வைக்கும்போது, எடை இழப்பு ஏற்படுகிறது. பாடுபட்டு விளைவிக்கப்படும் நெல்லில் கிடைக்கும் சொற்ப லாபத்திலும் இதுபோன்ற விரயம் காரணமாக விவசாயிகள் மேலும் இழப்பைச் சந்திக்கின்றனர். 
டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு குறுவைப் பருவத்தில் இயல்பான அளவைவிட கூடுதலாக நெல் பயிரிடப்பட்டுள்ளது. இப்போது அறுவடை தொடக்க நிலையிலேயே சில நிலையங்களில் இடப்பற்றாக்குறை, சாக்குத் தட்டுப்பாடு உள்பட பல்வேறு பிரச்னைகள் நிலவுகின்றன. வருகிற வாரங்களில் நெல் கொள்முதல் அதிகமாகும்போது,  இடப்பற்றாக்குறை பிரச்னை மேலும் அதிகமாகும் என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர். இப்படியொரு பிரச்னை இனிமேல் தொடர்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.


நிலையங்களிலும் மூட்டைகள் தேக்கம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள கட்டடத்திலும் ஏறத்தாழ 1,500 மூட்டைகள் மட்டுமே அடுக்கி வைக்க முடியும். நிலையத்துக்கு வரும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கிடங்குகளுக்கு இயக்கம் செய்தால்தான்,  ஒவ்வொரு நாளும் கொள்முதல் செய்யப்படும் நெல்லை கட்டடத்துக்குள் பாதுகாப்பாக வைக்க முடியும். இயக்கம் செய்வதற்கு சில நாள்களாவதால், நிலையத்தில் நெல் மூட்டைகள் தேங்கி, திறந்தவெளியில் வைக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியுசி தொழிற்சங்க மாநிலப் பொதுச் செயலர் சி. சந்திரகுமார் தெரிவித்தது: 
நிகழாண்டு அபரிமிதமான அளவுக்கு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அன்றைய நாளிலேயே லாரிகள் மூலம் கிடங்குகளுக்கு அனுப்பிவிட்டாலே  இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தலாம். ஆனால், அதற்கேற்ப லாரிகள் வசதி இல்லை. லாரி ஒப்பந்ததாரர்களும் உரிய நேரத்தில் வராததால் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைகின்றன. இதனால் ஏற்படும் எடை இழப்பு, நிலையப் பணியாளர்கள் மீது சுமத்தப்படுகிறது. ஒவ்வொரும் நாளும் மூட்டைகளை இயக்கம் செய்தாலே இப்பிரச்னையை தவிர்க்கலாம் என்றார் சந்திரகுமார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT