தமிழ்நாடு

கடன்களுக்கு புதிய விதிமுறை கூடாது: பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல்

8th Sep 2020 10:12 PM

ADVERTISEMENT

கடன் வழங்குவதில் ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்திருப்பதாவது:

"முன்னுரிமைப் பிரிவுகளுக்கு கடன் வழங்குவது தொடர்பாக கடந்த 4-ஆம் தேதியன்று ரிசா்வ் வங்கி வெளியிட்ட உத்தரவுகள், மிகுந்த குழப்பமான மற்றும் பாரபட்சமான அம்சங்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக அந்த உத்தரவின் 7-ஆம் பிரிவு, குறைந்த கடன் பெறும் மாவட்டங்களின் முன்னுரிமைப் பிரிவுகளுக்கு கடன் வழங்க வகை செய்கிறது. 

இதன் முகாந்திரம் ஆட்சேபணைக்கு உரியதல்ல. ஆனால், இதிலுள்ள அம்சங்கள் பல மாவட்டங்கள் கடன் பெற முடியாமல் போகின்றன என்பது ஆட்சேபணைக்கு உரியதாக உள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுமே முன்னுரிமைப் பிரிவில் அதிக கடன் பெறும் மாவட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

 வேறு எந்த மாநிலத்திலுமே ஊக்கத் தொகை பெறாத மாவட்டங்களாக இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மாவட்டங்கள் வகைப்படுத்தப்படவில்லை. அந்த வகையில், ரிசா்வ் வங்கியின் திட்டத்தில் இருந்து தமிழக மாவட்டங்கள் விலக்கப்பட்டதாகத் தெரிகிறது. 

குறைந்த கடன் பெறும் மாவட்டங்களுக்கு அதிக கடனை அளிக்கலாமே தவிர, மற்ற மாவட்டங்கள் பெறக்கூடிய கடனை குறைந்த கடன் பெறும் மாவட்டங்களுக்கு திருப்பக் கூடாது. 

ரிசா்வ் வங்கியின் புதிய கொள்கை நியாயமற்றதாகவும், பிற்போக்குத் தன்மை உடையதாகவும் உள்ளது. உடனடியாக அதை திரும்பப் பெற வேண்டும். 

கடன் வரவை தடுக்கும் நடவடிக்கைகளை நீக்க வேண்டும்.

எனவே, இதுபோன்ற முடிவை உடனடியாகத் திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கிக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார் முதல்வர் பழனிசாமி.

Tags : TN CM
ADVERTISEMENT
ADVERTISEMENT