தமிழ்நாடு

கம்பத்திலிருந்து குமுளிக்கு அரசு பேருந்துகள் இயக்கம்

7th Sep 2020 06:05 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு குமுளிக்கு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து திங்கள்கிழமை முதல் இயக்கப்பட்டது.

பொது முடக்கம் காரணமாக தமிழக கேரள எல்லை மூடப்பட்டது. பொது முடக்கம் தளர்வு காரணமாக செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் கேரள மாநிலத்தில் பொதுமுடக்கத்தில் தளர்வு ஏற்படுத்தப்படவில்லை.

இதற்கிடையில் திங்கள்கிழமை முதல் தமிழகப் பகுதிகளில் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து அரசு துவக்கியது. அதனடிப்படையில் தேனி மாவட்டத்திலிருந்து குமுளிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டது.

ADVERTISEMENT

திங்கள்கிழமை கம்பத்திலிருந்து குமுளிக்கு இயக்கப்பட்ட பேருந்தில் கேரள மாநிலம் செல்பவர்கள் இ-பாஸ் வைத்து அதன் மூலம் கேரளாவுக்குள் சென்றனர். அதேபோல் கேரளத்திலிருந்து தமிழகம் வரும் பயணிகள் குமுளி சோதனைச் சாவடியை கடந்து அரசுப் பேருந்தில் மூலமாக லோயர்கேம்ப் வருவர்.

அங்கு அவர்களுக்கு அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் வெப்பமானி மூலம் பரிசோதனை செய்யப்பட்டு முகவரியை மட்டும் சுகாதார பணியாளர்கள் பெற்றனர்.

அதே நேரத்தில் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு குமுளி வழியாகச் செல்லும் பயணிகளைக் கேரள மாநிலம் குமுளி சோதனைச் சாவடியில் சளி ரத்தம் மாதிரி பரிசோதனைகள் எடுத்து அவர்களது முகவரி மற்றும் செல்லிடப்பேசி எண்ணைப் பெற்றுக்கொண்டு அனுப்பி வைக்கின்றனர். குறிப்பாக இ பாஸ் அனுமதி சான்றிதழைச் சரிபார்த்து அனுப்புகின்றனர்.

இதுபற்றி சுகாதாரத்துறை அலுவலர் ஒருவர் கூறும்போது,

தேனி மாவட்டத்திலிருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்குச் செல்பவர்கள் கட்டாயம் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும். மேலும் கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வருகின்றவர்கள் லோயர்கேம்ப் மருத்துவ முகாமில் பரிசோதனை செய்து, முகவரியைக் கொடுத்து விட்டுச் செல்ல வேண்டும். பரிசோதனையில் தொற்று கண்டறியப்பட்டால் அவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றார். 

இதுபற்றி குமுளி காவல்துறையினர் கூறும்போது, 

தமிழகத்திலிருந்து லோயர் கேம்ப் வழியாக குமுளி செல்பவர்களுக்கு இ-பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பேருந்தில் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல் கேரளாவிலிருந்து தேனி மாவட்டத்திற்கு வருகின்றவர்களை லோயர் கேம்ப் முகாமில் பரிசோதனைகள் எடுக்கப்பட்டு, முகவரியைப் பெற்றுக்கொண்டு அனுப்பி வைக்கப்படுகின்றனர். பரிசோதனையில் தொற்று உறுதி தெரியவந்தால் சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT