தமிழ்நாடு

வாழப்பாடி அருகே ஏரியில் பிணமாக கிடந்த புது மாப்பிள்ளை: கொலையாளிகளை பிடிக்க காவலர்கள் தீவிரம்

6th Sep 2020 10:19 AM

ADVERTISEMENT


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பி.கரடிப்பட்டி ஏரியில் கொலையுண்ட நிலையில் பிணமாக கிடந்த வாலிபர், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த புதுமாப்பிள்ளை என்பது ஏத்தாப்பூர் காவலர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொலையாளிகளை பிடிக்க காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழப்பாடி அடுத்த பி கரடிப்பட்டி ஏரியில் வெள்ளிக்கிழமை காலை, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக இப்பகுதி மக்கள் ஏத்தாப்பூர் காவலருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த வாழப்பாடி டி.எஸ்.பி வேல்மணி, ஏத்தாப்பூர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) சுப்பிரமணியம் மற்றும் காவலர்கள், ஏரியில் கிடந்த சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையுண்டு கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலை செய்வதற்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து, ஏத்தாப்பூர் காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

ADVERTISEMENT

இறந்து கிடந்த இளைஞரின் படத்தை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இதனை கண்ட ஆத்தூர் அடுத்த தென்னங்குடிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி அய்யனார்(25) என்பவரின் குடும்பத்தினர், தனது மகனை காணவில்லை என்பதால் தேடி வந்த நிலையில், வாட்ஸ்அப்பில் வந்த கொலையுண்ட இளைஞரின் படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து, ஏரியில் பிணமாக கிடந்தவர் தனது மகன் ஐயனார் என தெரியவந்ததால், இவரது பெற்றோர்,  ஏத்தாப்பூர் காவல்நிலையத் தொடர்புகொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தகவல் தெரிவித்துள்ளனர்.  

இவர்களிடம் ஏத்தாப்பூர் காவலர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பி கரடிப்பட்டி ஏரியில் கொலையுண்ட நிலையில் பிணமாக கிடந்த வாலிபர், ஆத்தூர் அடுத்த தென்னங்குடிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான அய்யனார் என்பது உறுதியானது.

இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும், வரும் 16 ஆம் தேதி திருமணம் நடப்பதாக நிச்சயக்கப்பட்டு, திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது. 

இந்நிலையில், வாழப்பாடி அருகே நீர்முள்ளிகுட்டை கிராமத்திலுள்ள தனது சகோதரி வீட்டிற்கு, தனது மொபட்டில் வியாழக்கிழமை மாலை சென்ற அய்யனார்,  திருமண அழைப்பிதழ் அச்சடிப்பது குறித்து சகோதரியிடம் கலந்து பேசி விட்டு,  மீண்டும் தென்னங்குடிபாளையம் செல்வதாக கூறி சென்றது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அய்யனாரின் நண்பர்கள் குறித்தும், இவரை கொலை செய்ததற்கான காரணம் மற்றும் கொலை செய்த கொலையாளிகள் யார் என்பது குறித்தும் ஏத்தாப்பூர் காவலர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT