தமிழ்நாடு

தமிழகத்தில் இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

4th Sep 2020 12:30 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவரும் நிலையில், சென்னையிலிருந்து மதுரை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மேட்டுப்பாளையம், கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை ஆகிய இடங்களுக்கு  வரும் 7-ஆம் தேதி முதல் ரயில்கள் சேவை தொடங்க உள்ளன. 

கரோனா பரவலைத் தடுக்க மாா்ச் 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டுள்ள நிலையில், பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கும் நோக்கில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சென்னையுடன் இணைக்கும் கூடுதல் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குமாறு வியாழக்கிழமை மாநில அரசு ரயில்வே வாரியத்திடம் கூறியது. 

அதன்படி, தமிழகத்தில் வரும் 7- ஆம் தேதி முதல் முதல்கட்டமாக தமிழகத்தில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை - மதுரை பாண்டியன் விரைவு ரயில், சென்னை - கன்னியாகுமரி விரைவு ரயில், சென்னை - தூத்துக்குடி விரைவு ரயில், சென்னை - கோயம்புத்தூர் சேரன் விரைவு ரயில், சென்னை - மேட்டுபாளையம் நீலகிரி விரைவு ரயில் 7 சிறப்பு ரயில்களை மீண்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், கோவை-காட்பாடி, மதுரை-விழுப்புரம்-செங்கல்பட்டு சிறப்பு ரயில்கள் சென்னை வரை நீட்டிக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் உள்பட மொத்தம் 13 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

ADVERTISEMENT

சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் - கோவை இண்டர்சிட்டி சிறப்பு ரயில் (வண்டி எண்: 02675) வரும் 7- ஆம் தேதி முதல் தினசரி காலை 6.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, அன்று மதியம் 2.05 மணிக்கு கோவை சென்றடையும். இதைப்போல் கோவை-சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் இண்டர்சிட்டி சிறப்பு ரயில் (02676), மறுமார்க்கத்தில் மதியம் 3.15 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, இரவு 11 மணிக்கு சென்னை வந்தடையும்.

சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் - கோவை இண்டர்சிட்டி சிறப்பு ரயில் (02679), மதியம் 2.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, இரவு 10.15 மணிக்கு கோவை சென்றடையும். இதைப்போல் கோவை-சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் இண்டர்சிட்டி சிறப்பு ரயில் (02680), காலை 6.15 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, மதியம் 1.50 மணிக்கு சென்னை வந்தடையும்.

கோவை - சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் அதிவேக சிறப்பு ரெயில் (02674), இரவு 10.40 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 6.35 மணிக்கு சென்னை வந்தடையும். சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல்-கோவை அதிவேக சிறப்பு ரயில் (06273), வரும் 8- ஆம் தேதி முதல் இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு கோவை சென்றடையும்.

கோவை - மயிலாடுதுறை ஜன்சதாப்தி சிறப்பு ரயில் (02084), (செவ்வாய்கிழமை தவிர்த்து) காலை 7.10 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, மதியம் 1.30 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும். இதைப்போல் மயிலாடுதுறை - கோவை ஜன்சதாப்தி சிறப்பு ரயில் (02083), (செவ்வாய்கிழமை தவிர்த்து) மதியம் 2.50 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு கோவை வந்தடையும்.

சென்னை எழும்பூர் - திருச்சி சிறப்பு ரயில் (06795), காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, மாலை 4 மணிக்கு திருச்சி சென்றடையும். இதைப்போல் திருச்சி - எழும்பூர் சிறப்பு ரயில் (06796), வரும் 8-ஆம் தேதி முதல் காலை 10 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, மாலை 5.50 மணிக்கு சென்னைக்கு வந்தடையும்.

காரைக்குடி - சென்னை எழும்பூர் அதிவேக சிறப்பு ரயில் (02606), காலை 4.55 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டு, மதியம் 12.10 மணிக்கு சென்னை வந்தடையும். இதைப்போல் சென்னை எழும்பூர் - காரைக்குடி அதிவேக சிறப்பு ரயில்(02605), மதியம் 3.45 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.10 காரைக்குடி சென்றடையும்.

மதுரை - எழும்பூர் அதிவேக சிறப்பு ரயில் (02636), காலை 7 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.35 மணிக்கு சென்னை வந்தடையும். இதைப்போல் எழும்பூரில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு மதுரை சென்றடையும்.

மதுரை - சென்னை எழும்பூர் அதிவேக சிறப்பு ரெயில் (02638), வரும் 7- ஆம் தேதி முதல் இரவு 9.20 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.15 மணிக்கு சென்னை வந்தடையும். இதைப்போல் எழும்பூர் - மதுரை அதிவேக சிறப்பு ரயில் (02637) வரும் 8- ஆம் தேதி முதல் இரவு 9.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.30 மதுரை சென்றடையும்.

தூத்துக்குடி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (02694), இரவு 8.05 தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.35 மணிக்கு சென்னை வந்தடையும். இதைப்போல் எழும்பூர் - தூத்துக்குடி சிறப்பு ரயில் (02693), வரும் 10- ஆம் தேதி முதல் இரவு 7.35 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6.45 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் தொடங்கப்படுகிறது. ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அனைத்து பயணிகளும் ரயில் நிலையத்துக்கு வரும் போதும், பயணத்தின்போதும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

அனைத்து பயணிகளும் பயண நேரத்துக்கு 90 நிமிடங்கள் முன்னாள் ரயில் நிலையம் வர வேண்டும். பயணம் செய்யும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். கரோனா அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். ரயில் நிலையத்திலும், பயணத்தின்போதும் சமூக இடைவெளியை பயணிகள் கடைபிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT