தமிழ்நாடு

திருச்சியில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

1st Sep 2020 12:35 PM

ADVERTISEMENT

 

திருச்சியில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. 

கரோனா பொது முடக்கத்தினால் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக திருச்சி மாவட்டத்திலுள்ள சிறிய பெரிய கோயில்கள், தேவாலயங்கள் பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருந்தன.  இதன்படி, திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில், திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், வெக்காளியம்மன், கமலவல்லி நாச்சியார் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற முக்கிய கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லாததால், கோயில் வாசல்களில் நின்றவாறு வழிபட்டுச் சென்றனர்.

ADVERTISEMENT

ஆனால் கோயில்களில் உள்ள கடவுளர்களுக்கு நாள்தோறும் பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. பள்ளிவாசல்கள், தேவாலயங்களில் அனுமதி இல்லாததால், அவரவர் வீடுகளில் தொழுதும், பிரார்த்தனை செய்தும் வழிபட்டு வந்தனர். தொடர்ந்து பல்வேறு சமய அமைப்புகள் வழிபாட்டுத் தலங்களை திறக்க வேண்டி மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும்  புறநகர், மாநகர் பகுதிகளில் உள்ள வருவாய் குறைந்த சிறு கோயில்களை மட்டும் திறப்பதற்கு அரசு கடந்த மாதம் அனுமதித்தது. 

இதைத்தொடர்ந்து செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி  அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களையும் திறந்துகொள்ள அரசு அனுமதி அளித்தது. இதனால் அனைத்து சமயத்தினரும் மகிழ்ச்சியுடன் வரவேற்று அரசு விதித்த கட்டுப்பாடுகளை உடனுக்குடன் கடைப்பிடிப்தற்கான நடவடிக்கைகளைத் திங்கள்கிழமை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோயில்களில் செவ்வாய்க்கிழமை காலை முதலே பக்தர்கள் முகக் கவசம், கிருமிநாசினியில் கைகளைத் தூய்மை செய்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் நீண்ட வரிசையில் காத்திருந்து மனமுருகி சுவாமி தரிசனம் செய்தனர். அதுபோல் பள்ளிவாசல்களிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தொழுகை நடத்தப்பட்டது. அரசு வழிகாட்டு விதிமுறைகளைப் பொதுமக்கள் பார்வை படும்படி பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT