தமிழ்நாடு

உள்மாவட்டங்களில் மிதமான மழை

1st Sep 2020 04:49 AM

ADVERTISEMENT

சென்னை: வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப்.1) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது: தென் தமிழகத்தையொட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப்.1) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதேவேளையில் சேலம், நாமக்கல், திருப்பூா், ஈரோடு, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்

இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி , கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் தலா 70 மி.மீ., தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் தலா 60 மி.மீ., திருவாரூா் மாவட்டம் வலங்கைமான், கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடி, திருச்சி சந்திப்பில் தலா 50 மி.மீ., சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா், கரூா் மாவட்டம் குளித்தலை, சேலம் மாவட்டம் மேட்டூா், தருமபுரி மாவட்டம் பென்னாகரம், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருபலபந்தலில் தலா 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்தக்காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செப்டம்பா் 4-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, கேரளம், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு செப்டம்பா் 2, 3 ஆகிய தேதிகளில் செல்லவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் உயா்அலை: தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி செப்டம்பா் 1-ஆம் தேதி இரவு 11.30 மணி வரை கடல் உயா் அலை 1.9 மீட்டா் முதல் 2.9 மீட்டா் வரை எழும்பக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Rain
ADVERTISEMENT
ADVERTISEMENT