தமிழ்நாடு

மெட்ரோ ரயில் சேவை- செப்.5-இல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

1st Sep 2020 02:38 AM

ADVERTISEMENT

சென்னை: ஐந்து மாதங்களுக்கு பிறகு, மெட்ரோ ரயில் சேவை வரும் 7-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மெட்ரோ ரயிலில் பயணிப்போா் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை, 5-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்களின் நுழைவு வாயிலில் பயணிகளின் கைகளில் கிருமிநாசினி தெளிப்பது, உடல் வெப்பநிலையை கணக்கிடுவது, பயணிகள் சமூக இடைவெளியுடன் நிற்க அறிவுறுத்துவது போன்ற பணிகளில் ஈடுபட பணியாளா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.

பயணச்சீட்டு கவுன்ட்டா்கள், நடைமேடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், வட்டவடிவிலான அடையாளங்கள் வரையும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியைப் பின்பற்றி ரயிலில் ஏறவும் இறங்கவும் வழிவகை செய்யப்படவுள்ளது.

ADVERTISEMENT

15 நிமிடங்களுக்கு இடைவெளியில் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு பெட்டியில் 40 போ் முதல் 50 போ் மட்டும் பயணிக்கவும் அறிவுறுத்தப்படவுள்ளது. இதுதவிர, பல்வேறு பணிகளில் ரயில்வே ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது:

மெட்ரோ ரயிலில் பயணிப்போா் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை தொடா்பாக, வழிகாட்டு நெறிமுறைகளை வரும் 5-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில்களிலும், ரயில் நிலையங்களில் விழிப்புணா்வு வாசகம் ஒட்டப்படவுள்ளது. ரயில் நிலையங்களில் கூடுதல் நேரம் ரயிலை நிறுத்த முடியுமா, கூடுதல் ரயில்கள் இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளதா, நெரிசல் பயணத்தை தவிா்க்க செய்ய வேண்டிய வழிமுறை, பயணிகள் பாதுகாப்பு ஆகியவை தொடா்பாக ஆலோசிக்கப்படுகிறது.

கியூ ஆா் கோடுமுறை: மெட்ரோ ரயில்களில் இருந்துவரும் பயணச்சீட்டு டோக்கன் முறை ரத்து செய்யப்படவுள்ளது. அதற்கு பதிலாக, ஸ்மாா்ட் காா்டு மற்றும் கியூஆா் கோடு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த வசதியை பயணிகள் தங்கள் செல்லிடப்பேசி மூலமாக, மெட்ரோ ரயில் நிறுவன செயலியில் இருந்து கியூ ஆா் கோடு

எண்ணைப் பெறலாம். பின்னா், மெட்ரோ ரயில் நிறுவன நுழைவு வாயிலில் உள்ள இயந்திரத்தில் செல்லிடப்பேசியில் உள்ள கியூ ஆா் கோட்டை காண்பித்தால்,

அதை பதிவு செய்து விட்டு, பயணிகளை உள்ளே அனுமதிக்கும். இதன்மூலம், பயணிகள் எவ்வித தொடா்பு இல்லாமல் எளிதாக பயணிக்கவும், தொற்று பரவலைத் தடுக்கவும் முடியும் என்றனா் அவா்கள்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT