தமிழ்நாடு

இலங்கைக்கு அதிகரிக்கும் மஞ்சள் கடத்தல்

அந்தோனி ஃபெர்னாண்டோ

இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்திலிருந்து கடல் வழியாக மஞ்சள் கடத்தப்படுவது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது.
இலங்கை மக்களின் அன்றாட சமையலில் மஞ்சளுக்குத் தவிர்க்க முடியாத இடம் உள்ளது. கரோனா நோய்த்தொற்றுத் தாக்குதலுக்குப் பின்னர், மஞ்சளின் மருத்துவ குணத்தை உணர்ந்து தினமும் தேநீரில் மஞ்சள் பொடியைக் கலந்து பருகும் பழக்கமும் அங்கு அதிகரித்துள்ளது. இலங்கையின் ஓராண்டு மஞ்சள் தேவையானது 7 ஆயிரம் டன்கள். ஆனால், உள்நாட்டு உற்பத்தி 2 ஆயிரம் டன்கள்தான். மீதி 5 ஆயிரம் டன் மஞ்சள் இறக்குமதி செய்யப்படுகிறது. அதிலும் இந்தியாவில் இருந்துதான் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், கரோனா நோய்த்தொற்றுத் தாக்குதலைத் தொடர்ந்து, அத்தியாவசியமற்ற பொருள்கள் இறக்குமதிக்கு இலங்கை அரசு கடந்த ஏப்ரல் மாதம் தடை விதித்தது. அவற்றில் மஞ்சள் உள்ளிட்ட மசாலா பொருள்களும் அடக்கம். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இலங்கைப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இந்தத் தடைக்கான நோக்கம் என அதிபர் கோத்தபய ராஜபட்ச தெரிவித்தார். இதனால், இலங்கையில் மஞ்சளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இறக்குமதி தடைக்கு முன்னர் ஒரு கிலோ மஞ்சள் 325 இலங்கை ரூபாய் (இந்திய மதிப்பில் ரூ.126), இறக்குமதி வரி 102 இலங்கை ரூபாய் (இந்திய மதிப்பில் ரூ.41) என மொத்தம் 427 இலங்கை ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 4000 முதல் 5000 இலங்கை ரூபாயாக (இந்திய மதிப்பில் ரூ.1600 முதல் ரூ.2000 வரை) கள்ளச் சந்தையில் விற்கப்படுகிறது.
இச்சூழ்நிலையில்தான் இலங்கைக்கு கடல் வழியாக மஞ்சள் கடத்தல் கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் வேளாங்கண்ணி, கோடியக்கரை, வேதாரண்யம் ஆகிய இடங்களிலிருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பருத்தித்துறை என்ற இடத்துக்கும், தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கும், தூத்துக்குடி திரேஸ்புரத்திலிருந்து இலங்கையின் மன்னார், கிளிநொச்சி, புத்தளம் ஆகிய இடங்களுக்கும், ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம், வேதாளை, தனுஷ்கோடி ஆகிய இடங்களிலிருந்து மன்னார், கிளிநொச்சி, புத்தளத்துக்கும் கடல் வழியாக மஞ்சள் கடத்தப்படுகிறது. இலங்கைக்கு கஞ்சா அதிகம் கடத்தப்படும் வேதாரண்யம் கடல் பகுதியிலிருந்துதான் மஞ்சள் கடத்தலும் அதிகமாக நடைபெறுவதாக கடலோரப் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறிய சரக்குகளாக கடலோர மாவட்டங்களுக்கு மஞ்சள் கொண்டுவரப்படுகிறது. பின்னர், வேதாரண்யம் போன்ற கடலோரப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, இலங்கையிலிருந்து வரும் கடத்தல்காரர்களிடம் துண்டு மஞ்சள் பார்சல்கள் ஒப்படைக்கப்படுகின்றன.
இதுதவிர உள்ளூர் மீனவர்களின் உதவியுடனும் மஞ்சள் கடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் சந்திக்கும், இக்கடத்தலில் ஈடுபடும் தமிழக-இலங்கை மீனவர்கள், மஞ்சளைக் கொடுத்துவிட்டு அதற்கு ஈடாக தங்கத்தை பண்டமாற்றாகப் பெறுகிறார்கள் எனக் கூறப்படுகிறது.
கடலோரப் பாதுகாப்புப் படையினரின் கண்களில் சிக்காமல் இலங்கையைச் சேர்ந்த கடத்தல்காரர்களின் படகுகள் எப்படி இந்திய கடலோரப் பகுதிக்குள் வருகின்றன எனக் கேட்டபோது, "இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையானது இந்திய கடல் பகுதியில் அதிக இடங்களைக் கண்காணிக்க வேண்டியிருக்கிறது. அவ்வாறு பாதுகாப்புப் படையினர் கடலுக்குள் செல்லும் நேரத்தைப் பயன்படுத்தி, இலங்கையைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் படகுகளில் வந்து மஞ்சள் பார்சல்களை இங்குள்ள இடைத்தரகர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு சென்று விடுகின்றனர்' என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கள்ளச் சந்தை நபர்கள் பயன்படுத்தும் செல்லிடப்பேசி மூலம் அவர்களது இருப்பிடத்தை அறிந்து பிடிக்க முடிந்தது. இதைத் தொடர்ந்து, மஞ்சள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, கடல் பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் காத்திருந்து மஞ்சளை இலங்கைக்கு படகுகளில் கடத்திச் செல்கின்றனர். எனினும், பாக் ஜலசந்திக்கு அருகிலுள்ள கடற்கரையோரப் பகுதிகளுடன் எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடலோரப் பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரம் தெரிவித்தது.
ஆழ்கடலில் தாங்கள் ஆபத்தில் சிக்கும்போது கடலோரப் பாதுகாப்புப் படையினர் போதிய அளவு கைகொடுப்பதில்லை என்கிற எண்ணம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மீனவர்களுக்கும், கடலோரப் பாதுகாப்புப் படையினருக்கும் ஒருங்கிணைப்பு குறைவாகவே உள்ளது. 
"இலங்கைப் படகுகள் மஞ்சள் பார்சல்களை கொண்டு செல்வதற்காக இந்திய கடல் பகுதியில் காத்திருப்பது குறித்து தகவல் தந்தாலும் அதை கடலோரப் பாதுகாப்புப் படையினர் பொருட்படுத்துவதில்லை' எனவும் மீனவர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
இதுகுறித்து கடலோரப் பாதுகாப்புக் குழும அதிகாரி ஒருவர் கூறுகையில், வேதாரண்யம் அருகே கடலோர நுண்ணறிவுப் பிரிவின் சார்பில் ஒரு யூனிட் செயல்படுகிறது. கடந்த இரு மாதங்களாக பல கடத்தல் முயற்சிகளைத் தடுத்துள்ளோம். குறைந்த அளவு பணியாளர் பலம் காரணமாக பெருமளவு உளவுத் தகவல்களையே நம்பியிருக்கிறோம். கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டால் மேலும் சிறப்பாக செயல்பட முடியும் என்றார்.
இலங்கைக்கு மஞ்சள் கடத்தலைத் தடுக்க காவல் துறையினர், கடலோரப் பாதுகாப்புப் படையினர், சுங்கத் துறையினர் இணைந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT