தமிழ்நாடு

அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவமனை டெண்டர்களிலும் ஊழல்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

DIN

அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவமனை டெண்டர்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் 5 பேர் காயமடைந்ததாக வெளிவந்துள்ள செய்தி, எடப்பாடி அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவமனை டெண்டர்களிலும் தலைவிரித்தாடும் ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. பொதுமக்களுக்கு, குறிப்பாக ஏழை - எளிய நடுத்தரப் பிரிவு மக்களுக்கு, உயிர் காக்கும் சிகிச்சைகளுக்காகக் கட்டப்படும் மருத்துவமனைகளும், அ.தி.மு.க. ஆட்சியில் எப்படி உரிய தரமின்றி - மிகுந்த கவனக்குறைவுடன் கட்டப்படுகிறது என்பதற்கு நாமக்கல் நிகழ்வு ஓர் உதாரணமாகியிருக்கிறது. நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டும் பணி ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் மதிப்புள்ள பணி அல்ல; 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விடப்பட்டுள்ள டெண்டர். 

வருகின்ற செய்திகளின் படி, 60 சதவீத பணிகள் நிறைவேறியிருக்கின்ற நிலையில், இப்படியொரு விபத்து அங்கே நடந்திருக்கிறது. இதுவரை உயிரிழப்புகள் ஏதும் இருப்பதாகச் செய்திகள் வரவில்லை. ஆனால் கட்டிக் கொண்டிருக்கும் போதே கூரை சரிந்து விழுவது, அதிர்ச்சியளிக்கும் விதத்தில் உள்ளது.  ஏனென்றால் கட்டுமானப் பணிகளின் லட்சணம் எப்படியிருக்கும் - இந்த மருத்துவமனைக் கட்டடங்கள் இன்னும் சில ஆண்டுகள் கழித்து என்ன மாதிரி நிலையினை அடைந்திருக்கும் என்பதெல்லாம் கவலை அளிக்கக்கூடிய அம்சங்களாகும்.  புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் வாங்கி விட்டோம் என்று வாய் நீளமாகப் பெருமையடித்துக் கொள்ளும் அ.தி.மு.க. அரசு - இதுமாதிரி தரக்குறைவாக நடக்கும் பணிகளுக்கு டெண்டர் விடுவது, கமிஷன், கலெக்‌ஷன், கரெப்ஷனில் ஈடுபடுவதற்காகவே  என்பதை, சந்தேகத்திற்கு இடமில்லாமல் இந்தச் சம்பவமும் நாட்டு மக்களுக்கு எடுத்துக் காட்டுகிறது. 

ஒவ்வொரு டெண்டரும் கமிஷன் அடிப்படையிலேயே விடப்படுகிறது; அமைச்சர்கள் கொள்ளையடிப்பதற்கு என்றே உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஆகவே புதிய மருத்துவக் கல்லூரி - மருத்துவமனைகள் போன்றவை கட்டுவதற்கு விடப்பட்ட டெண்டர் பணிகளில் நடக்கும் முறைகேடுகள் மட்டுமல்ல - கமிஷனுக்காக விடப்பட்டுள்ள டெண்டர்கள் அனைத்துமே மக்களின் பேராதரவுடன்  திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன் ரத்து செய்யப்பட்டு - வேலை செய்யாமலேயே கொடுத்த கமிஷன்கள், டெண்டரில் நடைபெற்ற முறைகேடுகள் அனைத்திலும் முழு விசாரணை நடத்தப்பட்டு - குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள். அந்த நடவடிக்கையிலிருந்து எந்த அ.தி.மு.க. அமைச்சரும் - தேர்தல் நிதி திரட்ட இது போன்ற டெண்டர்களை விட்டு கமிஷன் அடிக்கத் துணை போகும் அதிகாரிகள் யாரும் தப்பி ஓடிவிட முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

SCROLL FOR NEXT