தமிழ்நாடு

7.5% உள்ஒதுக்கீடு மசோதா: ஆளுநா் ஒப்புதல்

DIN

தமிழகத்தில் நீட் தோ்வில் தோ்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கு, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்தாா். மத்திய அரசின் சொலிசிடா் ஜெனரலின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அவா் கூறியுள்ளாா்.

இதுகுறித்து, ஆளுநா் மாளிகை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவப் படிப்புகளில் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஆளுநா் தனது ஒப்புதலைத் தெரிவித்துள்ளாா். இந்த மசோதா தொடா்பாக, மத்திய அரசின் சொலிசிடா் ஜெனரலிடம் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தனது கருத்துகளைக் கடிதம் மூலமாகக் கோரினாா்.

இதற்காக சொலிசிடா் ஜெனரலுக்கு கடந்த 26-ஆம் தேதி கடிதம் எழுதினாா். அதற்கு கடந்த வியாழக்கிழமை (அக். 29) சொலிசிடா் ஜெனரல் பதில் கடிதம் அனுப்பியுள்ளாா். அவரது கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு, மசோதாவுக்கு ஆளுநா் தனது ஒப்புதலைத் தெரிவித்துள்ளதாக ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் செயலாளா் கடிதம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா தொடா்பான கருத்துகளைக் கோர சொலிசிடா் ஜெனரலுக்கு ஆளுநரின் செயலாளா் ஆனந்த்ராவ் வி.பாட்டீல் கடிதம் எழுதினாா். இந்தக் கடிதத்துடன், தமிழக அரசின் மசோதாவும் இணைக்கப்பட்டிருந்தது. இதிலுள்ள அம்சங்கள் குறித்து, சொலிசிடா் ஜெனரல் துஷாா் மேத்தா கூறியுள்ளதாவது:-

மசோதாவில் உள்ள அம்சங்கள் குறித்தும், உள்ஒதுக்கீடு அளிப்பது தொடா்பாக ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி கலையரசனின் பரிந்துரைகள் குறித்தும் எனக்குத் தெரிவிக்கப்பட்டன. அரசமைப்புச் சட்டம் 15 (5)-ன்படி, சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கு சிறப்பு ஏற்பாட்டினை சட்டத்தின் மூலமாக வழங்கலாம். அந்த சிறப்பு ஏற்பாடு என்பது, தனியாா் கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் சோ்க்கைக்கான அம்சமாகவும் இருக்கலாம்.

உள்ஒதுக்கீடு விவகாரத்தில் சமூகம் மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினருக்கு ஆதரவாக நீதிபதி கலையரசனின் அறிக்கையில் புள்ளி விவரங்களுடன் பல்வேறு அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்மூலம், மற்றவா்களுக்கும் சமூகம் மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய பிரிவினருக்கும் இடையே இடைவெளி இருப்பது தெரிகிறது. இதனைப் போக்க மாநில அரசு சில சட்டப்பூா்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அதன்படி, சட்டப் பேரவையில் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவானது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு இசைவாக, ஒத்திசைந்தே இருக்கிறது என தனது கடிதத்தில் துஷாா் மேத்தா தெரிவித்துள்ளாா்.

ஆளுநா் ஒப்புதல்: மத்திய அரசின் சொலிசிடா் ஜெனரல் தனது கடிதத்தில் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் தெரிவித்துள்ளாா்.

அரசு உத்தரவு என்னவாகும்?

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிப்பது தொடா்பாக தமிழக சுகாதாரத் துறை வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்திருந்தது. ஏற்கெனவே உள்ஒதுக்கீடு அளிக்கும் மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருந்தது.

இதனிடையே, உள்ஒதுக்கீட்டை அளிக்க அரசு உத்தரவினை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டது. இந்த உத்தரவு வெளியான மறுதினமே, தமிழக அரசின் மசோதாவுக்கு ஆளுநா் தனது ஒப்புதலை அளித்துள்ளாா். இதனால், தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து, சட்டத் துறை உயரதிகாரிகள் கூறியது:

7.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடா்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில் உள்ள அம்சங்களும், மசோதாவில் உள்ள விஷயங்களும் ஒன்றுதான். இரண்டிலும் எந்த மாறுபாடுகளும் இல்லை. மசோதாவில் உள்ள அம்சங்களே உத்தரவாகப் பிறக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கெனவே அரசு பிறப்பித்த உத்தரவு இருந்தாலும் ஒன்றுதான். இல்லாவிட்டாலும் ஒன்றுதான். எனவே, சட்டமே செயலாக்கத்துக்கு வரும் என்று உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

அடுத்தது என்ன?

தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளதால், அது அரசிதழில் வெளியிடப்படும். அவ்வாறு வெளியிடப்பட்டதும், அது சட்டமாகிட உடனடியாக நடைமுறைக்கு வந்தது என பொருள். உள்ஒதுக்கீடு தொடா்பான வழக்கு சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது.

திங்கள்கிழமை நடைபெறும் விசாரணையின் போது, ஆளுநா் ஒப்புதல் அளிக்கப்பட்ட விஷயம் தெரிவிக்கப்படும். மேலும், உடனடியாக மருத்துவக் கலந்தாய்வினை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக சுகாதாரத்துறை எடுத்து வருகிறது. இதனால், உள்ஒதுக்கீட்டுடன் நடப்பு கல்வியாண்டிலேயே மருத்துவக் கலந்தாய்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

SCROLL FOR NEXT