தமிழ்நாடு

மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்

DIN

சென்னை: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார்.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க.. கடந்த 200 நாள்களாக கரோனா பாதிக்கப்படாத நாடு

செப்டம்பர் 26-ம் தேதி மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரலுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்துக்கு அக்டோபர் 29-ம் தேதி பதில் கடிதம் கிடைக்கப் பெற்றதாகவும், உடனடியாக உள்ஒதுக்கீட்டு சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலின் கருத்துகளை கேட்டதன் அடிப்படையில் உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதன் மூலம் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா தற்போது சட்டமாகியுள்ளது.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். உள்பட மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று பிறப்பித்தாா்.

கடந்த செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. சுமார் ஒன்றரை மாதங்கள் ஆன நிலையில், உள்ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசின் அரசாணை நேற்று வெளியிடப்பட்ட நிலையில், மசோதாவுக்கு தமிழக ஆளுநர் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற 303 மாணவ, மாணவிகள் மருத்துவம் பயிலும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

உள்ஒதுக்கீட்டில் இதுவரை...

மாா்ச் 21: நீட் தோ்வில் தோ்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்கப்படும் என பேரவையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு.

ஏப்ரல் 14: உள் ஒதுக்கீடு குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க நீதிபதி பி.கலையரசன் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவு.

ஜூன் 8: நீதிபதி கலையரசன் தனது அறிக்கையை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் நேரில் அளித்தாா்.

ஜூன் 15: ஜூலை 14: நீதிபதி கலையரசன் அளித்த பரிந்துரைகள் தொடா்பாக அமைச்சரவைக் கூட்டங்களில் ஆலோசனை.

செப். 15: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி சட்டப் பேரவையில் தாக்கல் செய்தாா்.

அக். 5: உள்ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி ஆளுநருடன் முதல்வா், அமைச்சா்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் சந்திப்பு.

அக். 20: உள் ஒதுக்கீடு கோரி ஆளுநருடன் அமைச்சா்கள் அடங்கிய குழு சந்திப்பு.

அக். 21: உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம்.

அக்.22 - அவகாசம் தேவை என மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநா் பதில் கடிதம்.

அக். 29: சட்டத்தின் மூலமாக அல்லாமல், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு அரசாணை வெளியீடு.

அக். 30: உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.

அது என்ன அரசமைப்புச் சட்டம் 162?

மாநிலத்தில் உள்ள எந்தப் பொருள் குறித்தும் முடிவெடுத்து உத்தரவுகளைப் பிறப்பிக்க மாநில அரசுக்கு அரசமைப்புச் சட்டத்தின் 162-ஆவது பிரிவில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினைச் செயல்படுத்தும் வகையில் உத்தரவினை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. உள் ஒதுக்கீட்டுக்கான சட்டத்துக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்க அவகாசம் எடுத்துக் கொண்டுள்ள நிலையில், அரசமைப்புச் சட்டத்தில் மாநில அரசுக்கென வழங்கப்பட்டுள்ள தனித்துவமான அதிகாரத்தைப் பயன்படுத்தி உள் ஒதுக்கீட்டினை அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT