தமிழ்நாடு

மீலாது நபி: அன்பும் அமைதியும் தவழ முதல்வர் பழனிசாமி வாழ்த்து

29th Oct 2020 12:59 PM

ADVERTISEMENT

 

சென்னை: இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த தினமான “மீலாது நபி” திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த “மீலாது நபி” நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில்,  ஏழை எளியோருக்கு உதவுதல், அனைவரிடத்தும் அன்புடன் பழகுதல், தூய எண்ணத்தோடு வாழ்தல், உண்மையை பேசுதல், புகழையும், அறத்தையும் தராத செயல்களை செய்யாதிருத்தல், எளியோர்களிடத்தில் கருணை காட்டுதல் போன்ற மானுடம் தழைக்க இறைத்தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்தால், வாழ்வில் ஏற்றம் பெறலாம்.

தமிழக அரசு, இஸ்லாமியப் பெருமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,895 பள்ளிவாசல்களுக்கு விலையில்லா அரிசி வழங்கியது, இஸ்லாமியப் பெருமக்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக ஆண்டுதோறும் 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு வழங்கப்பட்டு வரும் நிர்வாக மானியத்தை 30 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாயாக உயர்த்தியது, நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தனக்கட்டைகளை ஆண்டுதோறும் வழங்குதல், மாவட்ட காஜிக்களுக்கு மாதந்தோறும் 20,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்குதல், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டு நிர்வாக மானியத்தை 2.50 கோடி ரூபாயாக உயர்த்தியது, உலமாக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை 1,500 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக உயர்த்தி அறிவித்தது போன்ற பல்வேறு நலத்திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT

இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த இந்த இனிய நாளில், உலகில் அன்பும், அமைதியும், சமாதானமும், சகோதரத்துவமும் தவழட்டும் என்று வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் பழனிசாமி.

Tags : TN CM palanisamy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT