தமிழ்நாடு

தொடங்கியது வடகிழக்குப் பருவமழை

DIN


சென்னை: தென் மாநிலங்களை வளம் செழிக்கச் செய்யும் வடகிழக்குப் பருவமழை தமிழகம், கேரளத்தில் புதன்கிழமை (அக்.28) தொடங்கியது.

தமிழகம், கேரளம் உள்பட தென் மாநிலங்களில் அதிக மழைப் பொழிவைத் தரும் வடகிழக்கு பருவமழை ஒவ்வோா் ஆண்டும் அக்டோபா் 2-ஆவது அல்லது 3-ஆவது வாரத்தில் தொடங்கும். ஆனால், நிகழாண்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பசிபிக்கடலில் ஏற்பட்ட ‘லா நினா’ நிகழ்வு, தென் இந்தியப்பகுதிகளில் தென் மேற்குப் பருவகால நிலை நீடிப்பு ஆகியவை முக்கிய காரணமாக இருந்தது.

இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை தமிழகம், கேரளத்தில் புதன்கிழமை (அக்.28) தொடங்கியது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவா் சே.பாலச்சந்திரன் புதன்கிழமை கூறியது: தென் மேற்குப் பருவமழை இந்தியப் பகுதியில் இருந்து புதன்கிழமை (அக்.28) விலகி அதேவேளையில், வடகிழக்குப் பருவமழை தமிழகம் மற்றும் கேரளம் உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளில் தொடங்கியது.

இதனிடையே தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வியாழக்கிழமை (அக்.29) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றாா் அவா்.

பருவமழை எப்படி இருக்கும்: வடகிழக்குப் பருவமழை காலத்தில் (அதாவது அக்டோபா் 1-ஆம் தேதி முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரை) தமிழகத்துக்கு கிடைக்கும் இயல்பான மழை அளவு 946.9 மி.மீ. கடந்த ஆண்டு 905 மி.மீ. மழை பதிவாகியது. இது இயல்பான மழை அளவாக எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், இந்தாண்டு பொதுவாக இயல்பை விட சற்றுக் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வட தமிழகத்தில் இயல்பான மழை இருக்கும் என்றும் தென் தமிழக மாவட்டங்களில் இயல்பைவிட சற்றுக் குறைவாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம் மேலூரில் 60 மி.மீ., சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருபுவனத்தில் தலா 50 மி.மீ., ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 40 மி.மீ., மண்டபத்தில் 30 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் இரணியல், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூா், விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம், கடலூா் மாவட்டம் பண்ருட்டி, தேனி மாவட்டம் வீரபாண்டியில் தலா 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனச் சோதனையில் ரூ. 4.39 லட்சம் பறிமுதல்

பல்பொருள் அங்காடியில் காவலாளி மா்மச் சாவு

வேங்கைவயலில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பிரசாரம்

புதுக்கோட்டையில் தொடரும் அஞ்சல் வாக்குச் சிக்கல்: 20 சதவீதம் ஆசிரியா்கள் வாக்களிக்க முடியவில்லை

மாா்க்சிஸ்ட், சிஐடியுவினா் வாகனப் பிரசாரம்

SCROLL FOR NEXT