தமிழ்நாடு

இளம் வழக்குரைஞர்களுக்கு மாத உதவித் தொகை திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்

29th Oct 2020 02:31 AM

ADVERTISEMENT

 

சென்னை: இளம் வழக்குரைஞர்களுக்கு மாத உதவித் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை தொடக்கி வைத்தார். 

இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

சட்டப் படிப்பினை முடித்து வெளியே வரும் இளம் வழக்குரைஞர்கள், பார் கவுன்சிலில் நிரந்தரப் பதிவு சான்றிதழ் பெறுவதற்கு முதலில் தேசிய அளவிலான வழக்குரைஞர்கள் குழுமத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்பின், மூத்த வழக்குரைஞர்களிடம் பயிற்சி பெற வேண்டும். கிராமப்புற ஏழ்மையான குடும்பத்தில் இருந்து சட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள், தங்களது தொழிலைத் தொடங்க குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் வரை ஆகின்றன. ஒருசிலர் தங்களை வழக்குரைஞர்களாக நிலைநிறுத்திக் கொள்ளாமல் வேறு தொழில்களுக்குச் சென்று விடும் நிலை உள்ளது. எனவே, இதைக் கருத்தில் கொண்டு இளம் வழக்குரைஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

இந்தத் திட்டத்தை 9 வழக்குரைஞர்களுக்கு உதவித் தொகையை வழங்கி முதல்வர் பழனிசாமி புதன்கிழமை தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பதக்கம் வென்றோருக்கு பாராட்டு: தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 14 பேருக்கு உயரிய ஊக்கத் தொகைகளை முதல்வர் பழனிசாமி புதன்கிழமை வழங்கினார். தங்கப் பதக்கம் வென்றோருக்கு தலா ரூ.2 லட்சமும், வெள்ளி வென்றோருக்கு ரூ.1.5 லட்சத்தையும், வெண்கலம் வென்றோருக்கு தலா ரூ.1 லட்சத்தையும் முதல்வர் அளித்தார். 

மேலும், சர்வதேசப் போட்டிகளில்  வெள்ளி மற்றும் வெண்கலப்  பதக்கங்கள் வென்ற வாள்வீச்சு வீராங்கனை சி.ஏ.பவானிதேவிக்கு ரூ.15 லட்சத்தையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT