தமிழ்நாடு

தொல்லியல் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

29th Oct 2020 02:34 AM

ADVERTISEMENT

 

மதுரை: தமிழக தொல்லியல் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் கூடுதல் நிதி ஒதுக்கக்கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த புஷ்பவனம் தாக்கல் செய்த மனு: நாடு முழுவதும் 3 ஆயிரத்து 691 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 412 தொல்லியல் நினைவுச் சின்னங்கள் உள்ளன. தமிழகத்துக்கு மத்திய அரசு குறைவாக நிதி ஒதுக்கீடு செய்வதால் இந்த நினைவுச் சின்னங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை.  தமிழக தொல்லியல் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள தொல்லியல் நினைவுச் சின்னங்களில் நவீனக் கழிப்பறை, உணவகம், மருந்தகங்கள் அமைக்கவும், மாற்றுத்திறனாளிகள் பார்வையிடுவதற்கு வசதி ஏற்படுத்தவும் வேண்டும்.
தமிழகத்தில் இந்திய தொல்லியல் கழகத்துக்கு சென்னை மற்றும் திருச்சியில் மட்டுமே அலுவலகங்கள் உள்ளன. 
எனவே தமிழகத்தில் தூத்துக்குடி அல்லது ராமநாதபுரத்தில் புதிதாக தொல்லியல் வட்ட அலுவலகங்களை உருவாக்க வேண்டும். மேலும் தொல்லியல் வட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT