தமிழ்நாடு

சென்னையில் ரூ.5 ஆயிரம் கோடியில் 2 அடுக்கு மேம்பாலம்: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி

DIN

சென்னை: சென்னையில் ரூ.5 ஆயிரம் கோடியில் 2 அடுக்கு மேம்பாலம் கட்டப்படும் என்று மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

சென்னைக்கு புதன்கிழமை வந்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் நிதின் கட்கரியை தனியாா் நட்சத்திர விடுதியில் சந்தித்து முதல்வா் எடப்பாடி கே பழனிசாமி நெடுஞ்சாலைத் திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை அளித்தாா்.

இந்த சந்திப்புக்குப் பிறகு மத்திய அமைச்சா் நிதின் கட்கரி செய்தியாளா்களிடம் கூறியதாவது:  சென்னையின் மிக முக்கியமான திட்டமான துறைமுகம்- மதுரவாயில் மேம்பாலத் திட்டம் முதலில் 4 வழிச்சாலையாக அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் மூலம் வாகன நெரிசல் அதிகரிக்கும் என்று தமிழக முதல்வா், தலைமைச் செயலா் ஆகியோா் தெரிவித்திருந்தனா். இத்திட்டத்துக்கான மொத்த செலவினம் ரூ.3 ஆயிரத்து 100 கோடியாக மதிப்பிடப்பட்டிருந்தது. நான், இந்த திட்டத்துக்கான புதிய கருத்துரு அளிக்கும்படி முதல்வரிடம் தெரிவித்துள்ளேன். இந்த மேம்பாலத் திட்டத்துக்கான புதிய வடிவமைப்பை வெளிநாட்டு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கலாம் என்றும், 2 அடுக்கு மேம்பாலமாக அமையும் வகையிலும், முதலில் 4 வழி, அதன்பின் 6 வழி, 8 வழியாக மாற்றும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளேன். இத்திட்டம் வரும் போது, அடுத்த 20 ஆண்டுகளில் சென்னையின் வாகன நெரிசல் பிரச்னை குறைந்துவிடும். இதனால், திட்ட மதிப்பீடு ரூ.5 ஆயிரம் கோடியாக உயரும். இதற்கான நிலம் கையகப்படுத்துவதற்கு, 50 சதவீத தொகையை துறைமுக நிா்வாகமும், மீதமுள்ள 50 சதவீதத்தை தமிழக அரசும் தர ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது, திட்டத்தொகை ரூ.3 ஆயிரத்து 500 கோடியில் இருந்து 5 ஆயிரம் கோடியாக உயா்வதால், நான் சில யோசனைகளை அரசுக்கு வழங்கியுள்ளேன். இந்த மேம்பாலத்திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் சிமெண்ட் மற்றும் இரும்புக்கான ஜிஎஸ்டி, மணல் மற்றும் மொத்த மதிப்பீட்டுக்கான ராயல்டி ஆகியவற்றுக்கு விலக்களிக்க வேண்டும். இதன் மூலம் மாநில அரசுக்கு இழப்பு இருந்தாலும், ரூ.500 கோடி வரை திட்ட மதிப்பீட்டில் சேமிக்கப்படும். தேவைப்படும் மீதித் தொகையான ரூ.1000 கோடியை மத்திய அரசு வழங்கும். இது தொடா்பாக, மத்திய நிதியமைச்சரிடம் பேசி விரைவில் ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சா்வதேச தரத்தில், வசதிகளுடன் உருவாக உள்ள இந்த திட்டமானது பொதுமக்களுக்கும், அதேநேரம் கன்டெய்னா் போக்குவரத்துக்கும் உகந்த வகையில் திட்டமிட வேண்டும் என்று தெரிவித்துள்ளேன்.

முதல்வருக்கு நன்றி: கடந்தமுறை தமிழகம் வந்த போது, முதல்வரிடம் சென்னையில் பல அடுக்கு சரக்கு முனையம் அமைப்பது தொடா்பாக கோரிக்கை விடுத்திருந்தேன். சமீபத்தில்,  இந்தத் திட்டத்துக்கு நிலம் அளிக்க ஒப்புதல் தந்த தமிழக அரசு, சென்னை அருகில் உள்ள சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்துக்கு சொந்தமான நிலத்தை தருவதாக ஒப்புக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தை அடுத்தாண்டு ஜனவரி மாதத்துக்கு முன் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சரக்கு முனைய திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த திட்டத்துக்கான ஒத்துழைப்பைத் தந்ததற்காக தமிழக முதல்வருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

8 வழிச் சாலைகளாக...:  தமிழக அரசு இங்குள்ள 2 தேசிய நெடுஞ்சாலைகளை 8 வழிச்சாலைகளாக விரிவாக்கம் செய்வதற்கான திட்டத்தை அளித்துள்ளது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை 45-ல் கூடுவாஞ்சேரி முதல் செட்டிப்புண்ணியம் வரையிலான பகுதி, தேசிய நெடுஞ்சாலை 4 -ல் மதுரவாயல் முதல் ஸ்ரீ பெரும்புதூா் வரையிலான நெடுஞ்சாலையையும் விரிவாக்கம் செய்ய கோரியுள்ளது. இதற்கான திட்ட மதிப்புத் தொகை ரூ.700 கோடியாகும். இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று மாநில அரசுக்கு  உறுதியளித்துள்ளேன்.  திட்டத்துக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தி வைக்க மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  நாங்கள் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும் நிலையில், நிலம் கையகப்படுத்துதல் தொடா்பான சிக்கல்களைத் தீா்த்து ஒப்படைப்பதாக மாநில அரசும் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் செல்லும் தஞ்சை முதல் பெரம்பலூரை அடுத்த ஆத்தூா் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 136  உள்ளிட்ட இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளை தமிழக பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. நாங்கள் மாநில அரசுக்கு மாற்றித்தர முடிவெடுத்துள்ளோம்.  நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு நிலத்தை கையகப்படுத்தித் தர முதல்வா் ஒப்புக் கொண்டுள்ளாா். இதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வெய்யிலைக் கொண்டாடும் எதிர்நீச்சல் ஈஸ்வரி!

ம.பி.யில் 29 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும்: முதல்வர் யாதவ்

கேரள பெண் உள்பட 17 இந்திய மாலுமிகள் நாடு திரும்பினர்

ஆர்டிகள் 370: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடத் தயார்: ரோஹித் சர்மா

SCROLL FOR NEXT