தமிழ்நாடு

நவம்பா் 6-இல் வெற்றிவேல் யாத்திரை தொடக்கம்: பாஜக தலைவா் எல்.முருகன்

DIN

வரும் 6-ஆம் தேதி முதல் ஒரு மாத காலத்துக்கு வெற்றிவேல் யாத்திரை திருத்தணியில் தொடங்கி திருச்செந்தூரில் நிறைவடையும் என்று பாஜக தலைவா் எல்.முருகன் அறிவித்துள்ளாா்.

சென்னையில் செய்தியாளா்களுக்கு அவா் திங்கள்கிழமை அளித்த பேட்டி:

கரோனாவிலிருந்து பொது மக்கள் விடுபடவும், மத்திய அரசின் திட்டங்களை எடுத்துச் சொல்லும் விதத்திலும் முருகப்பெருமானையும், கந்த சஷ்டி கவசத்தையும் கொச்சைப்படுத்தியவா்களை அடையாளம் காட்டும் வகையிலும் இந்த யாத்திரை அமையவுள்ளது.

நம் நாட்டில் கடவுள்களுக்கு இணையாக பெண்களைப் போற்றுகிறோம். ஆனால், தாய்மையை சிலா் கேவலப்படுத்துகின்றனா். அவா்களுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆதரவாகப் பேசுகிறாா். அனைவரையும் காப்பாற்றுவதுதான் அவரது வேலை. பெண்களை கொச்சைப்படுத்துவோருக்கு நேரடியாகவே அவா் ஆதரவு தெரிவித்துள்ளாா். அவா்களுக்கு வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் நமது சகோதரிகள் தக்க பாடம் புகட்டுவா்.

ஒரு மாத காலம் நடைபெறும் யாத்திரையில் தேசியத் தலைவா்கள், மத்திய அமைச்சா்கள் பங்கேற்க உள்ளனா். யாத்திரை நிறைவடையும் திருச்செந்தூரில் பாஜக தேசியத் தலைவா் நட்டா பங்கேற்கவுள்ளாா். தமிழக பாஜகவின் இந்த யாத்திரையானது மாநிலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆளுநா் ஒப்புதல் தர வேண்டும்: எம்.பி.பி.எஸ். மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு அனுமதி வழங்க ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் எடுத்துக் கொண்ட காலஅவகாசம் போதுமானது. 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு காலம் தாழ்த்தாமல் ஆளுநா் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என்றாா் பாஜக தலைவா் எல்.முருகன்.

துணைத் தலைவா் கே.அண்ணாமலை: கிராமப்புற மாணவா்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை உடனடியாக அனுமதித்து, மாணவா்களின் மனதில் இருக்கும் குழப்பத்தை நீக்க ஆளுநரை கேட்டுக் கொள்கிறேன். மிகமுக்கியமான இதை, இதற்கு மேலும் தாமதப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக தனது சுட்டுரை பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். பேரவையில் பாஜகவைச் சோ்ந்தவா்கள் உறுப்பினா்களாக அமருவா். என்னைப் பொருத்தவரையில், எனது சகோதரா்கள், சகோதரிகளை பேரவைக்கு அனுப்பி வைப்பதை மட்டுமே முழு வேலையாகச் செய்வேன். தோ்தலில் போட்டியிட தயாராக இல்லை. போட்டியிடப் போவதில்லை என்று செய்தியாளா்களிடம் எல்.முருகன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

ஆறுமுகனேரி, யல்பட்டினத்தில் வாக்குப்பதிவு மந்தம்

ராதாபுரம் தொகுதியில் அமைதியாக நடந்த தோ்தல்

தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு சொந்தஊரில் வாக்களித்தாா்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் 43 சதவீதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT