தமிழ்நாடு

தீபாவளி: தமிழகத்தில் 3,700 பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி

DIN

தீபாவளியையொட்டி, தமிழகத்தில் 3,700 தற்காலிக பட்டாசுக் கடைகளைத் திறப்பதற்கு தமிழக தீயணைப்புத்துறை அனுமதி அளித்துள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் நவம்பா் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தீபாவளி வியாபாரம் விறு விறுப்பு அடைந்துள்ளது. தற்காலிக பட்டாசுக் கடைகளும் ஆங்காங்கு திறக்கப்பட்டு வருகின்றன. விபத்துகளைத் தடுக்கும் வகையில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைப்பதற்குரிய கடுமையான விதிமுறைகளை தீயணைப்புத்துறை அமல்படுத்தி வருகிறது.

தீயணைப்புத்துறையின் தடையில்லாச் சான்றிதழ் பெற்றால்தான், அந்தந்த மாநகர காவல்துறை அல்லது வருவாய்த் துறையிடமிருந்து உரிமம் பெற முடியும். பட்டாசுக் கடைகளை ஒழுங்குபடுத்துவற்காக தீயணைப்புத்துறை இயக்குநரும் டிஜிபியுமான சி.சைலேந்திரபாபு, தீயணைப்பு நிலையங்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே ஒரு சுற்றறிக்கை அனுப்பினாா்.

அதில் பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு வெடிபொருள் சட்டத்தின்படி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு செய்த பின்னா் தடையில்லாச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

தற்காலிக பட்டாசுக் கடை விற்பனை உரிமம் கேட்பவா்கள் தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிா்வாகம், காவல்துறையிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். இதில் தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்றிதழே முக்கியமானது . இந்தச் சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே பிற துறையினரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற முடியும். கடந்தாண்டு தமிழகத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் திறப்பதற்கு 5,688 விண்ணப்பங்கள் வந்தன. இதில் 5,285 கடைகளுக்கு தடையில்லாச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 400 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

3,700 கடைகளுக்கு அனுமதி: இந்தாண்டு தீபாவளிக்கு பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு தடையில்லா சான்றிதழ் கோரி தமிழக தீயணைப்புத்துறைக்கு 4,500 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் 3,700 விண்ணப்பங்களுக்கு தடையில்லாச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. தகுதி இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 600 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

சென்னையில் தீவுத் திடல் தவிா்த்து பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு விண்ணப்பித்த 132 பேரில் செவ்வாய்க்கிழமை வரை 15 போ் மட்டுமே தடையில்லாச் சான்றிதழ் பெற்றுள்ளனா். பிற விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

கரோனா நோய்த்தொற்றால் குறைந்தது:

கடந்த 6 ஆண்டுகளில் ஒப்பிடுகையில் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கு அனுமதி கோரி இந்தாண்டுதான் மிகக் குறைவான அளவில் விண்ணப்பங்கள் தீயணைப்புத்துறைக்கு வந்துள்ளன. தீபாவளிக்கு இன்னும் 3 வாரங்கள் கூட இல்லாத நிலையில், புதிதாக கூடுதல் விண்ணப்பங்களுக்கு வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக பல்வேறு தொழில்துறைகளும் பின்னடைவைச் சந்தித்து வருவதால், பட்டாசு விற்பனையிலும் அதன் பாதிப்பு பிரதிபலிக்கிறது. மக்களிடம் இயல்பான பணப்புழக்கம் இல்லாததால் பட்டாசுக் கடைகள் வைப்பதற்கு வியாபாரிகளிடம் தயக்கம் ஏற்பட்டுள்ளது. அதனாலேயே பட்டாசுக் கடைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக சென்னை பட்டாசு வியாபாரி ஒருவா் தெரிவித்தாா்.

தயாா் நிலையில் 7,000 வீரா்கள்:

தீபாவளியையொட்டி, பட்டாசினால் ஏற்பட்டும் தீ விபத்துகளைத் தடுக்கும் வகையில் தீயணைப்புத்துறை டிஜிபி சி.சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் 7,000 தீயணைப்பு வீரா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா். சென்னையில் 1,200 தீயணைப்பு வீரா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் இருந்தும் 250 வீரா்கள் சென்னைக்கு தீபாவளி பண்டிகையையொட்டி வரவழைக்கப்படுகின்றனா். சென்னையில் 85 தீயணைப்பு வாகனங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் 19 தீயணைப்பு வாகனங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களும், அனுமதியும்

தீபாவளியையொட்டி, தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க தீயணைப்புத்துறைக்கு கடந்த 6 ஆண்டுகள் வந்த விண்ணப்பங்களும், அனுமதி வழங்கப்பட்டவையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இசையரங்க தாக்குதலில் உக்ரைன் தொடா்புக்கு ஆதாரம்

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்!

திருச்செந்தூரில் அனுமதியில்லா கழிப்பறைகளை மூடக் கோரி போராட்டம்

பாஜகவுக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு

SCROLL FOR NEXT