தமிழ்நாடு

மருத்துவப் படிப்பில் 50% இடஒதுக்கீடு: தமிழக கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

DIN


புது தில்லி: மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழகத்தைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு (ஓபிசி) மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்த உத்தரவிட வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்ட இடைக்கால கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அதன் காரணமாக, மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு நிகழாண்டில் 50 சதவீத இடஒதுக்கீடு கிடைக்காத நிலை உருவாகியிருக்கிறது.

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழக அரசு, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 27-ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், "மத்திய அரசு அல்லாத மருத்துவக் கல்வி நிறுவனங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் தமிழக ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும். இதற்கு மூன்று மாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது' என்று உத்தரவிட்டது. மேலும்,  "இந்தக் குழுவின் பரிந்துரைகளை அடுத்த கல்வியாண்டு முதல் அமல்படுத்துமாறும்' உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்த இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி, தமிழக அரசு மற்றும் அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜூலை 2-ஆம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீடு மனுக்கள் கடந்த 13-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் பதில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதற்கு பதிலளித்த மத்திய அரசு, "அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்குவது சாத்தியமில்லை' என்று தெரிவித்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்குவந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பு கல்வியாண்டு முதல் 50 சதவீத ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்திய தமிழக அரசு மற்றும் அதிமுகவின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்குடி அருகே விபத்து: பெண் பலி

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் கருத்தரங்கம்

2-ஆம் கட்ட வாக்குப் பதிவு வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு

தமிழக- கா்நாடக எல்லையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனை

கா்நாடகத்தில் வாக்குப்பதிவு: அம்மாநிலத் தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை

SCROLL FOR NEXT