தமிழ்நாடு

'முதுகெலும்பு இருந்தால் ஆளுநரிடம் 7.5% இடஒதுக்கீடு ஒப்புதலைப் பெறுங்கள்'

25th Oct 2020 02:27 PM

ADVERTISEMENT

முதுகெலும்பு இருந்தால் ஆளுநரிடம் 7.5% இடஒதுக்கீடு ஒப்புதலைப் பெறுங்கள் என்று அதிமுக அரசை திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அ.தி.மு.க. நடத்தும் 'நீட்' நாடகத்தின் சாயம் வெளுத்துவிட்டதால், தி.மு.க. நடத்திய போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும், தமிழக மாணவர்களுக்குச் செய்துவரும் துரோகப்பட்டியலுக்குப் பதில் சொல்லத் தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் - ஏழை மாணவர்களுக்கும் பாதிப்பு என்று முதலில் குரல் கொடுத்தது தி.மு.க. அத்தோடு அந்தத் தேர்வை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றது தி.மு.க என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ஆனால் பழனிசாமி முதல்வரானதும் மத்திய பா.ஜ.க. அரசின் காலில் விழுந்து நீட் தேர்வை அனுமதித்தார். அது அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் செய்த முதல் துரோகம். 

தேர்வு எழுதப் போன மாணவர்களைக் கம்மலைக் கழற்று, கொலுசைக் கழற்று என்று சித்திரவதைப்படுத்த இடம் கொடுத்தார். அது இரண்டாவது துரோகம். 13 மாணவர்கள் இதுவரை தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணமாக இருந்தது மூன்றாவது துரோகம். 

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற முடியாமல் கையறுநிலையில் நின்றது எடப்பாடி திரு. பழனிசாமியின் நான்காவது துரோகம். 

அந்த மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதை 23 மாதங்கள் மறைத்து - உடனே நிராகரிக்கப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பிச் சட்டமாக்கும் வாய்ப்பைக் கோட்டை விட்டது ஐந்தாவது துரோகம்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற நீதியரசர் கலையரசன் பரிந்துரையை 7.5 சதவீதமாகக் குறைத்து மசோதாவை நிறைவேற்றியது ஆறாவது துரோகம். இதற்கு ஒப்புதல் பெறாமல் இருப்பது ஏழாவது துரோகம் என்று பட்டியலிட்டுள்ளார்.

தி.மு.க.வின் போராட்டத்தைக் கொச்சைப் படுத்துவது அரசுப் பள்ளி மாணவர்களை - கிராமப்புற மாணவர்களைக் கொச்சைப்படுத்தும் கீழ்த்தரமான போக்காகும்.

அ.தி.மு.க.வின் இந்த நீட் நாடகத்தின் சாயம் வெளுத்துப்போய்விட்டது. இதனால் இன்றோ நாளையோ 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவிற்கு முதுகெலும்பு இருந்தால் ஆளுநருக்குக் கெடு விதித்து ஒப்புதலைப் பெறுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : DMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT