தமிழ்நாடு

ஸ்பெஷல் டிஜிபி நியமனம் ஒரு விபரீத விளையாட்டு: துரைமுருகன் 

DIN

ஸ்பெஷல் டிஜிபி.யாக ராஜேஷ் தாஸ் நியமனம் ஒரு விபரீத விளையாட்டு என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ் தாஸ் ஐ.பி.எஸ் அதிகாரிக்குப் பதவி உயர்வு அளித்து - சட்டம் ஒழுங்கு ஸ்பெஷல் டி.ஜி.பி.யாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்திருப்பது, உச்சநீதிமன்றத்தால் “பிரகாஷ் சிங்” வழக்கில் வழங்கப்பட்ட 7 கட்டளைகளுக்கும், தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் 2013-க்கும் முற்றிலும் எதிரானதாகும். தமிழகத்தில் ஏற்கனவே சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.யாக - அதாவது, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநராக திரிபாதி ஐ.பி.எஸ் இரண்டு ஆண்டுகளுக்கு (ஜூன் 2021 வரை), பிரகாஷ் சிங் வழக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது, அவரது அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் - தேர்தல் காலப் பணிகளில் “எடப்பாடிக்கு” எடுபிடியாக இருக்க வேண்டும் என்பதற்காக – போலீஸ் தலைமையகத்தில் இன்னொரு டி.ஜி.பி. அந்தஸ்துள்ள அதிகாரியை சட்டம் ஒழுங்குப் பணிகளில் நியமித்திருப்பது, ஒட்டுமொத்த காவல்துறை நிர்வாகத்தையே சீரழிக்கும் மிக மோசமான முன்னுதாரணம் ஆகும். “இரட்டைத் தலைமையால்” அ.தி.மு.க.விற்குள் நடக்கும் கூத்துகள், டி.ஜி.பி. அலுவலகத்திலும் அரங்கேறட்டும்- அங்கும் நாமும் ஓ.பி.எஸ்ஸும் அடித்துக் கொள்வது போல் - அதிகாரிகளுக்குள் அடித்துக் கொள்ளட்டும் என்ற இந்த விபரீத விளையாட்டு தமிழகக் காவல்துறையின் தலைமைப் பண்பை அடியோடு நாசப்படுத்தி விடும் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

இரண்டு டி.ஜி.பி.களுக்கு என்னென்ன பொறுப்பு?  தமிழ்நாட்டில் உள்ள காவல்துறை அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருக்கும் தமிழ்நாடு காவல்துறைத் தலைமை இயக்குநருக்குக் கட்டுப்பட வேண்டுமா? அல்லது அதே தகுதியில் டி.ஜி.பி.யாக இருக்கும் “ஸ்பெஷல் டி.ஜி.பி.க்கு”கட்டுப்பட வேண்டுமா?  ஆகவே “ஒருங்கிணைப்பாளர்”, “இணை ஒருங்கிணைப்பாளர்” என்று அ.தி.மு.க.விற்குள் உருவாக்கியுள்ளது போல், காவல்துறை தலைமையகத்தில் “டி.ஜி.பி.” - “ஸ்பெஷல் டி.ஜி.பி” என்று உருவாக்கியுள்ளதைத் திரும்பப் பெற்று - பிரகாஷ் சிங் வழக்கின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை மதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT