தமிழ்நாடு

7.5% இடஒதுக்கீடு விவகாரம்: 'அதிமுக அரசு மாணவர்களை ஏமாற்றுகிறது'

25th Oct 2020 02:54 PM

ADVERTISEMENT

அ.தி.மு.க. அரசு, இந்த 7.5 இடஒதுக்கீடு விவகாரத்தில் பல உண்மைகளை மறைத்து, மாணவர்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தமது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கின்ற 'கொலைகார' நீட் தேர்வு கூடவே கூடாது என்பதுதான் தி.மு.கழகத்தின் நிலை. அதற்காக நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு மத்திய அரசின் முடிவு என்ன என்பதை அதிமுக அரசு அறிவிக்காமல் உள்ளது.

நீட் தேர்வால் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களின் மருத்துவக் கனவு என்பது முற்றிலுமாக சிதைக்கப்பட்டு விட்டது. ஒட்டுமொத்தமாக நீட் தேர்வை ரத்து செய்யப் போராட வேண்டிய அ.தி.மு.க. அரசு, தனது இயலாமையையும் பொறுப்பற்றத்தனத்தையும் மறைப்பதற்காக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை இடஒதுக்கீடு வழங்குவது என முடிவு செய்தது.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, தமிழக அரசு அமைத்த உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் குழு, மருத்துவக் கல்லூரிகளில் 10% இடங்களை ஒதுக்க பரிந்துரை செய்திருந்தது. 

ADVERTISEMENT

இதனை தமிழக அரசு ஏற்றிருந்தால், எம்.பி.பி.எஸ். இடங்களான 4,043-ல், 10 விழுக்காடு இடங்கள், அதாவது 404 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்திருக்கும்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி அரசு, நீதியரசரின் பரிந்துரைக்கு மாறாக,  தன்னிச்சையாக, அதை 7.5 சதவீதமாகக் குறைத்தது. இதனால் 300 மாணவர்களுக்கு மட்டுமே எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும் நிலை உருவானது.

இதனால் அதிமுக அரசின் இந்தத் தன்னிச்சையான, பொறுப்பற்ற செயலால் 100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ சேர்க்கை இப்போதே பறிபோய்விட்டது.  இந்த மசோதாவிற்கு கூட ஒப்புதல் அளிக்க மறுக்கும் மாநில ஆளுநரின் செயல் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. அதிகார எல்லை மீறலானது.

இந்த விவகாரத்தில் உறுதியான நிலைப்பாடும் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை விரைந்து நடைமுறைப்படுத்தட்டும். அதுவரை, தி.மு.கழகத்தின் போராட்டம் ஓயாது'' என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


 

Tags : stalin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT