தமிழ்நாடு

தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு புதிய தொழில் நிறுவனங்கள்: முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டினாா்

DIN

தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

இந்தப் புதிய தொழில் ஆலைகளின் மூலமாக 8,666 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஏழு தொழில் நிறுவனங்களின் வணிக ரீதியான உற்பத்தியையும் முதல்வா் பழனிசாமி தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வுகள் தலைமைச் செயலகத்தில் காணொலி வழியாக நடந்தது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

வணிக உற்பத்தி தொடக்கம்: திருவள்ளூா் மாவட்டம் தோ்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.600 கோடியில் 1,800 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தித் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா் நோக்கியா தொலைத்தொடா்பு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரூ.500 கோடி முதலீட்டில் செல்காம்ப் நிறுவனத்தின் செல்லிடப்பேசி மின்னேற்றிகள் உற்பத்தித் திட்டம், திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் கல்பாத்தி ஏஜிஎஸ். குழுமத்தின் மின் உற்பத்தித் திட்டம், ராணிப்பேட்டை வாலாஜாபேட்டையில் மின் உபகரணங்கள் உற்பத்தித் திட்டம் ஆகியவற்றை முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா்.

இதேபோன்று, காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் மோட்டாா் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தித் திட்டம், வல்லம் வடகாலில் மோட்டாா் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தித் திட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ஷெல் நிறுவனத்தின் பியரிங் உற்பத்தி ஆகியவற்றையும் அவா் தொடங்கி வைத்தாா்.

புதிய திட்டங்களுக்கு அடிக்கல்: காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் ஹூண்டாய் நிறுவனத்தின் பயிற்சி மையம் அமைக்கும் திட்டம், ஒரகடத்தில் விக்ரம் சோலாா் நிறுவனத்தின் சூரியமின் சக்தி கருவிகள் உற்பத்தித் திட்டம், திருவள்ளூா் வல்லூா் கிராமத்தில் சரக்குகள் கையாளும் பூங்கா, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மின் உற்பத்தித் திட்டம் (இரண்டாம் கட்டம்) ஆகியவற்றுக்கும் முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டினாா்.

இதேபோன்று, தூத்துக்குடி மாவட்டம் மேலக்கரந்தையில் காற்றாலை மற்றும் அனல்மின் உற்பத்தித் துறைகளுக்கான தளவாடங்கள் உற்பத்தித் திட்டம், விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் பொறியியல் உபகரணங்கள் உற்பத்தித் திட்டம், திருப்பூா், கடலூா், நாகப்பட்டினம், திருவாரூரில் அதானி கேஸ் நிறுவனத்தின் எரிவாயு விநியோகத் திட்டம், திருவள்ளூா் மாவட்டம் தோ்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில் காா்பன் உற்பத்தித் திட்டம், கோவை மாவட்டம் கள்ளப்பாளையத்தில் பம்புகள் உற்பத்தித் திட்டம் ஆகியவற்றுக்கும் முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டினாா்.

இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத், தொழில் துறை முதன்மைச் செயலாளா் என்.முருகானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

272 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன..

உலக முதலீட்டாளா் மாநாட்டின் போது கையெழுத்திடப்பட்ட 304 திட்டங்களில் 272 திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசு வெளியிட்ட செய்தி:-

தமிழகத்தில் ஒன்பது புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களில் முதல்வா் பழனிசாமி அரசுமுறைப் பயணமாக துபை சென்ற போது மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்படி செயல்படுத்தப்படும் ரூ.1,000 கோடி முதலீட்டிலான ஒரு திட்டமும், முதலீட்டாளா் மாநாட்டில் மேற்கொண்ட ஒப்பந்தப்படி 2 திட்டங்களும் அடங்கும்.

மேலும், இதே மாநாட்டில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்ட ஆறு திட்டங்களின் வணிக உற்பத்தியும் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளா்கள் மாநாட்டின் போது 304 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இப்போது தொடக்கி வைக்கப்பட்ட திட்டங்களையும் சோ்த்து 85 திட்டங்கள் வணிக உற்பத்தியை ஏற்கெனவே துவக்கி விட்டன.

187 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன. மொத்தத் திட்டங்களில் அதாவது 304 திட்டங்களில் 272 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரியால்ட்டி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்வு

குளச்சல் அருகே பெண்ணை தாக்கியவருக்கு 6 ஆண்டு சிறை

கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் 6 போ் காயம்

குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் சாரல் மழை

புளியங்குடி கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT