தமிழ்நாடு

விளாத்திகுளத்தில் அதிரடிப் படை குவிப்பு: இரு எம்.எல்.ஏ.க்கள் உள்பட 350 பேர் மீது வழக்குப்பதிவு

22nd Oct 2020 08:27 AM

ADVERTISEMENT

விளாத்திகுளம்: விளாத்திகுளத்தில் இரு எம்.எல்.ஏ.க்கள் உள்பட 350 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிரடிப்படை காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 

அண்மையில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஜீ,வி. மார்க்கண்டேயன் ஏற்பாட்டில் விளாத்திகுளத்தில் பேரூந்து நிலையம் அருகே கொடியேற்றும் விழா நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பாக காவல்துறை அனுமதி பெற்றிருந்தனர்.

அதே தினத்தன்று அதிமுக சார்பில் பேரூந்து நிலையம் அருகே கொடியேற்ற அனுமதி கேட்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இருப்பினும் அதிமுகவினர் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், திமுக மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கீதாஜீவன், விளாத்திகுளம் பேரூந்து நிலையம் முன்பாக கட்சி கொடியை ஏற்றிவிட்டு உரையாற்றி கொண்டிருந்த போது அப்பகுதியை நோக்கி அதிமுக எம்.எல்.ஏ. சின்னப்பன் தரப்பினர் அதிமுக கட்சி கொடியேற்ற திரண்டு வந்தனர். அப்போது இரு கட்சியினரிடையே வன்முறை ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு காவலர்கள் எம்.எல்.ஏ, சின்னப்பன் உள்ளிட்ட அதிமுகவினரை தடுத்து நிறுத்தினர். இதனால் காவலர்களுக்கும் அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

இதில், கோவில்பட்டி டி.எஸ்.பி. கலை கதிரவனுக்கு ரத்த காயம் ஏற்பட்டதையடுத்து காவலர்கள் லேசான தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். காவல்துறை தடியடியை கண்டித்து எம்.எல்.ஏ. சின்னப்பன் தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

சம்பவ இடத்துக்கு வந்த நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநவ், ஏ.டி.எஸ்.பி. கோபி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் இரவு 7 மணியளவில் எம்.எல்.ஏ சின்னப்பன் தலைமையில் அதிமுகவினர் கட்சி கொடியேற்றிவிட்டு கலைந்து சென்றனர்.

இந்நிலையில், சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை சீர்குலைத்தல், கூட்டத்தை கூட்டி தொற்று நோயை பரப்புதல், கலகம் விளைவித்தல், தடையை மீறுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக திமுக எம்.எல்.ஏ கீதாஜீவன், அதிமுக எம்.எல்.ஏ. சின்னப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், அதிமுக ஒன்றிய செயலாளர் பால்ராஜ் உள்பட இரு கட்சிகளை சேர்ந்த 350 பேர் மீது விளாத்திகுளம் காவல்நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விளாத்திகுளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிரடிப்படை காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Vilathikulam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT