தமிழ்நாடு

சங்ககிரியில் ரூ.2.50 கோடியில் கட்டப்படவிருக்கும் எரிதகன மேடை

எஸ்.தங்கவேல்

சேலம் மாவட்டம், சங்ககிரியில் முதன்முறையாக பல்வேறு பொதுநல அமைப்புகளின் சார்பில் சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட லட்சுமி தீர்த்தம் அருகே முக்கால் ஏக்கர் பரப்பளவில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புதிய எரிதகன மேடை கட்டப்பட உள்ளது. அதற்கான முதற்கட்ட ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றது. 

சங்ககிரி பேரூராட்சி 18 வார்டுகளைக் கொண்டுள்ளது. இப்பகுதியில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு காரணங்களால் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்ய மக்கள் சங்ககிரியிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஈரோடு, 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருச்செங்கோடு, 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எடப்பாடி  ஆகிய மூன்று இடங்களில் இயங்கி வரும் எரிதகன மயானங்களுக்கு கொண்டு சென்று தகனம் செய்து வருகின்றனர். 

மூன்று இடங்களுக்குச் செல்லும் போது உறவினர்கள், நண்பர்கள் அழைத்துச் செல்ல வாடகை  வாகனங்களைப் பயன்படுத்தியும் வருகின்றனர். அவர்களுக்கு கூடுதல் செலவுகள் ஏற்பட்டு வருகின்றன.  இந்நிலையில் பொதுமக்களின் சிரமங்களைக் கருத்தில்கொண்டு சங்ககிரி, அக்கமாபேட்டையில் உள்ள முன்னாள் திரைப்பட இயக்குநர் மறைந்த ஏ.பி.நாகராஜனின் வம்சாவழியினர் ஒன்றிணைந்து நடத்தி வரும் முருக சந்திரா எஜுகேசனல் மற்றும் சோசியல் பவுண்டேசன் டிரஸ்ட்  தலைவர் சிவா பரமசிவம் தலைமையிலான நிர்வாகிகள் சங்ககிரியில்  இலவசமாக எரிதகன மேடை கட்டி தருவதாக சங்ககிரி பேரூராட்சி நிர்வாகத்திடம்  மனு அளித்துள்ளனர். 

புதிதாக கட்டப்படவுள்ள எரிதகன மேடையின் மாதிரி தோற்றம்

இதனையடுத்து சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட   எடப்பாடி செல்லும் சாலையில் உள்ள லட்சுமி தீர்த்தம் அருகே  அரசு அனுமதியுடன் பேரூராரட்சியின் சார்பில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து முருக சந்திரா எஜூகேசனல் மற்றும் சோசியல் பவுண்டேசன் டிரஸ்ட் தலைமையில், எடப்பாடி ஸ்வலெக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் தலைவர் ஆர்.செல்லப்பன், சங்ககிரி   லாரி உரிமையாளர்கள் சங்கம், ரோட்டரி சங்கம் உள்ளிட்ட பொது நல அமைப்புகளும் இணைந்து  பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சுமார் முக்கால் ஏக்கர் பரப்பளவில்  சுமார் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் எரிவாயுவைப் பயன்படுத்தி சடலங்களை எரியூட்டுவது, ஈமக்காரியங்கள் செய்வதற்கு தனி இடம், குளியல், கழிவறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், சடலங்களை எடுத்து வருவதற்கு ஆம்புலன்ஸ் வாகன வசதி, தகன மயானத்தில் கண்காணிப்பு கேமரா, ஜெனரட்டர் வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளைச்  செய்து பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கத்  திட்டமிட்டுள்ளனர்.

இப்பணிகளைத் தொடங்க பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிகள் வரும் 27ம் தேதி சங்ககிரி எம்எல்ஏ எஸ்.ராஜா தலைமையில் நடைபெற உள்ளதெனப் பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

இதுபற்றி முருகு சந்திரா எஜுகேசனல் மற்றும் சோசியல் பவுண்டேசன் டிரஸ்ட் சிவா பரமசிவம் கூறியது:-

எங்களது கூட்டுக் குடும்பத்தின் சார்பில் அக்கமாபேட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு கட்டிடம் கட்ட நிலம் தானமாக வழங்கப்பட்டன. அதனையடுத்து தொடக்கப்பள்ளியை  உயர்நிலை பள்ளியாக விரிவாக்கம் செய்ய ஊர் பொதுமக்கள் சார்பில் மேலும் நிலங்களை வழங்க கோரிக்கை விடுத்தனர் அதனையடுத்து கூடுதல் நிலம் இலவசமாக  வழங்கப்பட்டன.  அதனையடுத்து காளியம்மன் கோயிலுக்கும் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  

நகர்ப்புறத்தில் உள்ள அறிவு சார்ந்த விஷயங்கள் அக்காமாபேட்டை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் கிடைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் 1966 ம் ஆண்டு கோயில் வளாகத்தில் நூலகம் அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் தற்போது  தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளுக்கு அருகிலேயே நூலகத்திற்கு நிலம் இலவசமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு இணையதளத்துடன் கூடிய கணினி வசதிகளைக் கொண்டு நூலகம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன என்றார்.  

சங்ககிரியில் எரிவாயு தகன   மாயான வசதிகள் ஏற்படுத்த வேண்டுமென்ற எண்ணமும் இருந்தது அதற்கான முயற்சியில் எங்கள் குடும்ப அங்கத்தினர் கடந்த மூன்று ஆண்டுகளாக  ஈடுபட்டு வந்தோம். பின்னர் அதற்கான நிலம் அரசு சார்பில் லஷ்சுமி தீர்த்தம் அருகே உள்ள பகுதியில் பேரூராட்சி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன அதில் எங்களுடன் இணைந்து சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்பட பொதுநல அமைப்புகள் இணைந்து அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய எரி தகன மேடை கட்டுவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளோம் என்றார். 

இப்பணிகள் நிறைவடைந்த பின் சங்ககிரி பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளோம் என்றார். மேலும் அவர் இவ்வசதி சங்ககிரியில் அமையப் பெற்றால் சங்ககிரி மட்டுமல்லாது சங்ககிரி அருகில் உள்ள சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்ட பொதுமக்களும் பயன்பெறுவார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT