தமிழ்நாடு

அக். 31-ல் ஆட்சியர்களிடம் மனு அளிக்க நியாயவிலைக் கடை பணியாளர்கள் முடிவு: கு.பாலசுப்பிரமணியன்

DIN

தமிழகம் முழுவதும் வருகிற அக்.31-ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களை நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் சந்தித்து தமிழக முதல்வருக்கான கோரிக்கை மனுவை அளிக்க முடிவு செய்துள்ளோம் என அச்சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் புதன்கிழமை அன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 

நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு அரசாணை வெளியிட்டு ஊதிய மாற்றம் செய்யும் முறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு இணையான ஊதியம், கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 2007 ஆண்டு முதல் வலியுறுத்தி வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஒரு ஊதிய மாற்றக்குழுவை அரசு நியமித்தது. அது கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தலைமையில் நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கை மூலம் எந்தவித பொருளாதார பலனும் கிடைக்கவில்லை. எனவே ஒரு ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் ஊதிய மாற்றத்திற்கான குழுவை நியமித்து ஊதிய மாற்றம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நியாயவிலைக்கடை பணியாளர்கள் மற்றும் கூட்டுறவு கடன் சங்க நிர்வாகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு ஏற்கனவே ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டி அறிக்கையை விரைவில் வெளியிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்திற்குக் குறையாமல் இருக்க வேண்டும். ஊதிய மாற்றக்குழுவின் அறிக்கையையும், ஓய்வூதியத்திற்கான கமிட்டியின் அறிக்கையையும் 31-12-2020-க்குள் அரசு பெற்று அதன் மீது சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். 

சுமார் 4 ஆயிரம் விற்பனையாளர்கள் பணிவரன்முறை என்ற அடிப்படையான செயல் இத்துறையில் நடைபெறாமல் உள்ளது. உச்சநீதிமன்றம் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு பணிவரன்முறை என்பதை மாநில முழுவதுமான ஒரே மாதிரியான அணுகுமுறையைப் பின்பற்றப்பட்டு வருவதால், மாநில கூட்டுறவு பதிவாளரே பணிவரன் முறை செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. எனவே தமிழகஅரசு இவ்விஷயத்தில் தலையிட்டு பாகுபாடாக நடத்தப்படும் 4 ஆயிரம் பணியாளர்களுடைய வாழ்க்கையில் நிரந்திரத்தை உருவாக்கித் தர வேண்டும். 

கரோனா சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை தமிழக அரசு மெத்தனமாகப் பரிசீலனை செய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கரோனாவால் 7 பணியாளர்கள் இறந்துள்ளார்கள். இதில் 2 பணியாளர்கள் குடும்பத்திற்கு மட்டும்  ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணியாளர்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். பேருந்து போக்குவரத்து இல்லாத நேரத்தில் பணிக்குச் சென்று விபத்தில் சிகிக்கை இரண்டு பணியாளர்கள் இறந்துள்ளார்கள். அவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். கரோனா பரிசோதனை அனைத்து நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு மாதம் ஒரு முறை அவசியம் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் குறைந்த பட்சம் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களைச் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த பரிசோதனை இதுவரை செய்யப்படவில்லை. நவீன பரிசோதனை கருவிகள் வந்துவிட்ட சூழலில் கூட மக்கள் பணியில் ஆபத்தோடு பணியாற்றும் பணியாளர்களுக்குப் பரிசோதனை செய்யப்படாதது வருந்தத்தக்கது. கரோனா பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு இலவச மருத்துவ வசதியை அரசே வழங்க வேண்டும். ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். 

கூட்டுறவுத்துறையில் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய பொருளாதார பலன்கள் அனைத்தும் ஏடிஎம் மூலம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டு ஏடிஎம் மூலம் வழங்க உத்தரவிட்டும் கூட 3-ல் 2பங்கு ஊழியர்களுக்கு ஏடிஎம் மூலம் வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்கள் கூட்டுறவுத்துறை அதிகாரிகளால் சுரண்டப்படுகிறார்கள். பெண் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். 

கூட்டுறவுத்துறை விற்பனையாளர்களின் அனைத்து கோரிக்கைகளையும் தமிழக முதல்வருக்கு கடந்த 6 மாதங்களாக அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே எங்களது சங்கம் அக்.31-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் பெருந்திரளாகச் சென்று மாவட்ட ஆட்சியர்களை நேரில் சந்தித்து தமிழக முதல்வருக்கான விண்ணப்பத்தை வழங்குவது என முடிவு செய்துள்ளோம் என கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். 

பேட்டியின் போது தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க பொதுச்செயலாளர் கோ.ஜெயச்சந்திரராஜா, மாநில துணைத் தலைவர் துரை.சேகர், நிர்வாகிகள் நரசிம்மன், எஸ்.யோகராஜ், செந்தில்குமார், ராமதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT