தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அருகே ஓட்டுநர்களை தாக்கிவிட்டு செல்போன் ஏற்றி வந்த லாரி கடத்தல்

21st Oct 2020 10:10 AM

ADVERTISEMENT


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மேலுமலை அருகே சென்னையிலிருந்து மும்பைக்கு செல்போன் பாரம் ஏற்றிக்கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி இன்று அதிகாலை கடத்தப்பட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லியில்  இருந்து எம்ஐ செல்போன்களை ஏற்றிக்கொண்டு MH 04 JK 8553 என்ற பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி மும்பைக்கு சென்றுகொண்டிருந்தது. லாரியை கோவை, இராமநாதபுரம் அருணாசலம் தேவர் காலணியைச் சேர்ந்த நடராஜ் மகன் அருண் (34), சென்னை, பூந்தமல்லி விஜயலட்சுமி நகரைச் சேர்ந்த  குஷன் சாந்த் மகன் சதீஸ்குமார்(29) ஓட்டிச் சென்றனர். 

கண்டெய்னர் லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் மேலுமலை அருகே சென்றுகொண்டிருந்த போது 3 லாரிகளில் வந்த 10 மர்ம நபர்கள் அவர்களின் லாரியால் வழி மறித்து லாரியில் ஏறி ஓட்டுநர்கள் இருவரையும் தாக்கி கண்களைக் கட்டி அருகிலுள்ள வனப்பகுதிக்கு இழுத்துச் சென்று கை, கால்களை கட்டிவிட்டு மூன்று பேர் காவலுக்கு இருந்துகொண்டனர். பின்னர், மற்றவர்கள் செல்போன் ஏற்றிவந்த கண்டெய்னர் லாரியை எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.

அதன் பின்னர் மூன்று பேர்களும் லாரி ஓட்டுநர்களை வனப்பகுதிலேயே விட்டுவிட்டு சுமார் ஒரு மணிநேரம் கழித்து சென்றுள்ளனர். 

ADVERTISEMENT

அவர்கள் சென்றதை அடுத்து காயமடைந்த ஓட்டுநர்கள் இருவரும் சாலைக்கு வந்து அவ்வழியே சென்ற 108 வாகனத்தை நிறுத்தி அதன் மூலம் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சூளகிரி காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் லாரியில் 2 ஓட்டுநர்கள் வந்ததாகவும் அவர்களை தாக்கிவிட்டு மர்ம கும்பல் லாரியை கடத்திச் சென்றுள்ளனர்.

கடத்திச் செல்லப்பட்ட செல்போன்களின் மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர். 

Tags : Cellphone truck Cellphone truck smuggling
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT