தமிழ்நாடு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசாணை மூலமே இட ஒதுக்கீடு வழங்குக: திருமாவளவன்

20th Oct 2020 10:00 PM

ADVERTISEMENT


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசாணை மூலமே இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5%  இட ஒதுக்கீடு வழங்குவதற்காக ஒருமனதாக சட்டம் இயற்றப்பட்டு அது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. பல மாதங்கள் ஆன பிறகும்கூட அந்த சட்டத்துக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் முன்வரவில்லை. 

இந்நிலையில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வைத் தமிழக அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்காமல் அரசாணை மூலமே அந்த 7.5% இட ஒதுக்கீட்டை வழங்கி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

ADVERTISEMENT

புதிதாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால்தான் அதற்கு சட்டம் இயற்ற வேண்டிய தேவை உள்ளது. ஏற்கனவே இருக்கும் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. அதுமட்டுமின்றி அதற்காக சட்டம் எதுவும் இயற்ற வேண்டிய தேவை இல்லை. அரசாணை மூலமே அதை நிறைவேற்றலாம். 

1997 ஆம் ஆண்டில் கிராமப்புற மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அன்றைய திமுக அரசு ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்து அந்த குழுவின் பரிந்துரைப்படி அரசாணை மூலமே 15% இட ஒதுக்கீட்டை வழங்கியது. 

அதற்குப்பிறகு வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அந்த 15% இட ஒதுக்கீட்டை 25 % ஆக  உயர்த்தியது. அதுவும்கூட அரசாணை மூலமே செய்யப்பட்டது. பின்னர் இந்த அரசாணைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த இட ஒதுக்கீடு சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டாலும்கூட,  அரசாணை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறவில்லை. 

கிராமப்புற மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை சரியாக நிறுவவில்லை என்றும் இந்த இட ஒதுக்கீட்டின் மூலமாக அந்தப் புறக்கணிப்பு தீர்க்கப்படும் என்பதை அரசாங்கம் நிரூபணம் செய்யத் தவறிவிட்டது என்றும்தான் காரணம் கூறப்பட்டது. அன்றைய அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தால் நிச்சயம் தமிழக அரசுக்கு வெற்றி கிடைத்திருக்கும்.

உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை அண்மையில்கூட உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதிசெய்துள்ளது. 

எனவே, ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திராமல் அரசாணை வெளியிட்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5%  இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தத் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்."

Tags : Thirumavalavan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT