தமிழ்நாடு

திருப்பூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

20th Oct 2020 02:45 PM

ADVERTISEMENT


திருப்பூர்: திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலக நிர்வாகி ஆர்.மோகனன் தலைமை வகித்தார். 

இதில், பங்கேற்றவர்கள் கூறியதாவது: வருவாய்த்துறையின் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்.
கரோனா பணியின் போது உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன், கருணை அடிப்படையில் ஒருவருக்கு பணி வழங்க வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் அலுவலக உதவியாளர், இரவு காவலர், ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும், ஜாக்டோ-ஜியோ பாதிப்புகளான துறைவாரி குற்றவியல் நடவடிக்கைகளை உடனடியாக சரி செய்து, 11 நாள்கள் போராட்ட காலத்தை பணிக்காலமாக வரன்முறைப்படுத்த வேண்டும். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவம்பர் 5 ஆம் தேதி சென்னையில்உள்ள வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் 1,000 வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதுடன், நவம்பர் 25, 26 ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதிலும் உள்ள 12 ஆயிரம் வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் ஆர்ப்பாட்டத்தின்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இந்த ஆர்ப்பாட்டத்தில்,  மாநில செயற்குழு உறுப்பினர் ப.தங்கவேல், மாவட்ட செயலாளர் ச முருகதாஸ், மாவட்ட ஆட்சியர் அலுவலக பொறுப்பாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நன்றி கூறினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT