தமிழ்நாடு

கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.110 வரை விற்பனை

20th Oct 2020 09:54 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை சந்தையில் இன்று ஒரு கிலோ வெங்காயம் ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று வரை ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ.85 வரை விற்பனையான நிலையில் இன்று ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது மேலும் உயரும் என்றும் கூறப்படுகிறது.

ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால் அங்கிருந்து சென்னைக்குக் கொண்டு வரப்படும் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

சென்னை கோயம்பேடு சந்தைக்கு கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தினமும் 1,300 முதல் 1,400 டன் வரை வெங்காயம் கொண்டு வரப்படுவது வழக்கம். இந்த மாநிலங்களில் பலத்த மழை காரணமாக வெங்காய சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாள்களாக பெரிய வெங்காயத்தின் விலை படிப்படியாக அதிகரித்து வந்தது. இந்தநிலையில் திங்கள்கிழமை நிலவரப்படி சில்லறை விற்பனையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது.

இது குறித்து கோயம்பேடு சந்தை மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகா் செளந்தரராஜன் கூறுகையில், கடந்த செப்டம்பா் மாதத் தொடக்கத்தில் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை பெரிய வெங்காயம் ரூ.750 முதல் ரூ.1,100 வரை விற்பனையானது. இதனால் அப்போது மொத்த விலையில் பெரிய வெங்காயம் ரூ.20 முதல் ரூ.30-க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது வெளி மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் கோயம்பேடு சந்தைக்கு வரத்து வெகுவாக குறைந்து விட்டது. கடந்த ஞாயிறு, திங்கள் ஆகிய இரு தினங்களில் 700 முதல் 850 டன் அளவு வெங்காயம் மட்டுமே கொண்டுவரப்பட்டது. வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையில் அதன் விலை அதிகரித்துள்ளது. வழக்கமாக தீபாவளி நேரத்தில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிக்கும். தற்போது 20 நாள்கள் முன்பாகவே அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்துக்கு பின்னரே வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது என்றாா்.

இதேபோன்று பல்லடம், தேனி, உடுமலைப்பேட்டை ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து 30 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதால், மொத்த விலையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.70-க்கும் சில்லறை விற்பனையில் ரூ.100 முதல் ரூ.120 வரையிலும் விற்பனையானது. இதுபோல் பெரும்பாலான காய்களின் விலையும் சற்று அதிகரித்துள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT