தமிழ்நாடு

மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் ஈரோட்டு பெண்ணுக்குப் பொருத்தி சாதனை

20th Oct 2020 05:21 PM

ADVERTISEMENT

 

மதுரையில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் ஆம்புலன்சு மூலம் 3 மணி நேரத்தில் ஈரோடு கொண்டு வரப்பட்டு, சிறுநீரகம் செயல் இழந்த பெண்ணுக்குப் பொருத்தி அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கரூர் மாவட்டம் கீழ பகுதி சங்கிபூசாரி ஊரைச் சேர்ந்த ரேணுகோபால் மனைவி ஜெகதாமணி(45). இவர் கடந்த 2 ஆண்டுகளாக சிறுநீரகம் செயல் இழந்து, கரூர் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதற்கிடையில் தமிழ்நாடு உடல் உறுப்பு தானம்(ஆர்கன் ஷேரிங்) அமைப்பில் சிறுநீரகம் பெற ஜெகதாமணி பதிவு செய்து, 2 ஆண்டுகளாக சிறுநீரகத்திற்காகக் காத்திருந்தார். 

இந்நிலையில், மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் கருப்பையா என்பவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாகவும், அவரது உடல் உறுப்புகள் தானம் செய்ய உள்ளதாகவும், அதில், அவரது சிறுநீரகம், ஜெகதாமணிக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜெகதாமணி ஈரோட்டில் உள்ள அபிராமி கிட்னி கேரின் தலைமை மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு, அவருக்கு ரத்த பரிசோதனை, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து அவருக்கு சிறுநீரகம் பொருத்தலாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்து, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஜெகதாமணியை தயார்ப்படுத்தினர். இதையடுத்து மதுரையிலிருந்து மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் ஆம்புலன்சு மூலம் ஈரோட்டிற்கு கொண்டு வரப் போக்குவரத்து காவல்துறையினர் அனுமதித்தனர். பின்னர், மதுரையிலிருந்து 10 மணிக்கு புறப்பட்ட ஆம்புலன்சு, மின்னல் வேகத்தில் ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனைக்கு மதியம் 1.20 மணியளவில் வந்து சேர்ந்தது. பின்னர், அம்மருத்துவமனையின் டாக்டர் சரவணன் தலைமையிலான குழுவினர் ஜெகாதாமணிக்கு வெற்றிகரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தனர்.

இதுகுறித்து அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சரவணன் கூறியதாவது:

ஜெகதாமணி என்ற பெண்ணுக்கு கிரானிக்கிட் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவரது சிறுநீரகம் செயல் இழந்து விட்டது. கடந்த 2 வருடமாக டயலாசிஸ் கரூர் மாவட்டத்தில் உள்ள அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அவருக்கு, ரத்த சம்மந்தப்பட்டவர்களிடம் இருந்து கிட்னி பெற முடியாத காரணத்தால், தமிழ்நாடு உடல் உறுப்பு தானம்(ஆர்கன் ஷேரிங்) என்ற அமைப்பில் கடந்த 2018ம் ஆண்டு அவரது பெயரைப் பதிவு செய்து, காத்திருப்போர் பட்டியலிலிருந்து வந்தார். 

தமிழ்நாடு உடல் உறுப்பு தானம் பெறும் அமைப்பின் பதிவு செய்த, முன்னுரிமையில் அடிப்படையில் ஜெகதாமணிக்கு சிறுநீரகம் பெறப்பட்டு, போக்குவரத்து காவல்துறை உதவியுடன் மதுரையிலிருந்து ஆம்புலன்சு மூலம் ஈரோட்டிற்குக் கொண்டு வரப்பட்டு ஜெகதாமணிக்கு வெற்றிகரமாகச் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது. இந்த நிகழ்வு சிறுநீரக தானம், உடல் உறுப்பு தானத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT