தமிழ்நாடு

மானாமதுரையில் பலத்த மழை: அரசு மருத்துவமனையைத் தண்ணீர் சூழ்ந்தது

20th Oct 2020 02:43 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் நீண்ட நாள்களுக்குப்பின் கடந்த திங்கள்கிழமை இரவு பெய்த கன மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

இங்குள்ள அரசு மருத்துவமனை வளாகம் உள்பட ஏராளமான குடியிருப்புகளை மழைத் தண்ணீர் சூழ்ந்தது. மானாமதுரை பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இரவு நேரங்களில் மக்கள் புழுக்கம் தாங்காமல் தூக்கமின்றி தவித்து வந்தனர். இந்நிலையில் அடிக்கடி காலநிலை மாறி வானத்தை மழை மேகங்கள் சூழ்ந்தாலும் மழை பெய்யாமல் இயற்கை ஏமாற்றி வந்தது. 

சில சமயங்களில் திடீர் திடீரென சாரலும் பரவலாக சுமாரான மழையும் பெய்து வந்தது. சில நாட்களாக இரவில் குளிர் நிலவுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு ஆராவாரம் இல்லாமல் சாரலாகத் தூறத் தொடங்கிய மழை பின்னர் வலுவடைந்து பலத்த மழையாக மாறியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. மானாமதுரை நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியிருப்புகளைத் தண்ணீர் சூழ்ந்து நின்றது. இதனால் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற முடியாமல் அவதிப்பட்டனர். 

ADVERTISEMENT

மானாமதுரை அண்ணாமலைநகர் பகுதியில் வீடுகளை மழைத் தண்ணீர் சூழ்ந்தது.

மானாமதுரையில் தாயமங்கலம் செல்லும் ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் வடிகால் வாய்கள் அனைத்தும் அடைபட்டுப் போனதால் மருத்துவமனையில் பிரசவ வார்டு கட்டிடத்தை மழைத்தண்ணீர் சூழ்ந்து தெப்பக்குளம் போல் காட்சியளித்தது. இதனால் பிரசவ வார்டிலிருந்து  மக்கள் வெளியேற அவதிப்பட்டனர். மானாமதுரை-சிவகங்கை சாலையில் மரம் முறிந்து சாலையில் விழுந்து மின்தடை ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தொடர்ந்து  2 மணி நேரம் பெய்த மழையால் மானாமதுரை பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து இருந்தது. கால்நடை தீவன உற்பத்திக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என கால்நடை வளர்ப்போர் தெரிவித்தனர்.மேலும் விவசாயப் பணிக்கும் இந்த மழை கை கொடுக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT