தமிழ்நாடு

குடியிருப்புப் பகுதியில் மதுக்கூடம்: எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

19th Oct 2020 06:04 PM

ADVERTISEMENT

 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் குடியிருப்புப் பகுதியில் தனியார் மதுக்கூடம் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை கோட்டாட்சியர் அலுவலகத்தைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

அருப்புக்கோட்டை வருவாய்க்கோட்டாட்சியர் அலுவலகத்தைத் திங்கள் கிழமை சத்தியவாணி முத்து நகரைச்சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்ட இந்தப் போராட்டத்திற்கு அந்நகரைச் சேர்ந்த ஆதி திராவிடர் பறையர் உறவின்முறைத் தலைவர் வை.ஆறுமுகம் தலைமை வகித்தார். 

முற்றுகையின்போது பொதுமக்கள் கூறியதாவது, 

ADVERTISEMENT

எங்கள் குடியிருப்பானது தமிழகத்தின் ஆதிதிராவிடர் சமூகநலத்துறை மூலம் கடந்த 1979ம் ஆண்டில், அருப்புக்கோட்டை ரயில்வே மேம்பாலத்தை ஒட்டி மேற்கே உள்ள இடத்தில் கட்டித் தரப்பட்டது. இதற்கான பாதையும் அப்போது அமைத்துத் தரப்பட்டது. இந்நிலையில் எங்கள் பகுதியருகே குவின்ஸ் ரத்தினவேல் என்பவர் திருமண மண்டபம், தங்கும் விடுதி மற்றும் திரையரங்கு ஆகியவற்றை நடத்தி வருகிறார். 

இந்நிலையில் புதிதாக தங்கும் விடுதி,உணவகம் மற்றும் தனியார் மதுக்கூடம் அமைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அதையும் செயல்படுத்தி வருகிறார்.இதனால் மதுக்கூடத்திற்கு மது அருந்த வந்தவர்கள் எங்கள் குடியிருப்பிற்குச் செல்லும் பாதையை மறித்து நடந்து செல்லக்கூட இடமில்லாதபடி வாகனங்களை நிறுத்திக்கொள்வதுடன், மது அருந்தியவர்கள் அப்பகுதியிலேயே ரகளையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் எங்கள் குடியிருப்பிற்குச்செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன், பெண்களுக்கு உரியப் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே பாதை ஆக்கிரமிப்புகளைத் தடுப்பதுடன் குடியிருப்புப்பகுதியில் செயல்படும் மதுக்கூடத்தை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் தெரிவித்தனர். 

இதுதொடர்பான மனுவையும் அவர்கள் கோட்டாட்சியர் முருகேசனிடம் அளித்தனர். அப்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கோட்டாட்சியர் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக குடியிருப்பு வாசிகளிடம் உறுதியளித்ததையடுத்து முற்றுகையைக் கைவிட்டு அம்மக்கள் கலைந்து சென்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT