தமிழ்நாடு

ஓமலூரில் ரூ.4 கோடி மதிப்பில் முதியோர் இல்லம் கட்டுமானப் பணி தொடக்கம்

18th Oct 2020 11:55 AM

ADVERTISEMENT

 

ஓமலூர் அருகே பச்சனம்பட்டியில் ஆதரவற்ற முதியவர்களுக்கு இலவச சேவை செய்யும் வகையில் முதியோர் இல்லத்திற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில் இரண்டு எம்எல்ஏக்கள் கலந்துகொண்டு பூமி பூஜையை  தொடங்கி வைத்தனர். 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பச்சனம்பட்டி ஊராட்சி வேலக்கவுண்டன்புதூர் பகுதியில் ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லம் கட்டுவதற்கான பூமி பூஜை ஓமலூர் மேற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றியக் குழுத் தலைவருமான எஸ்.எஸ்.கே.ஆர். ராஜேந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஓமலூர் சட்டப்பேரைவ உறுப்பினர் வெற்றிவேல், சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடாஜலம் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தனர். 

இதுகுறித்து முதியோர் இல்லத்தின் ஒருங்கிணைப்பாளரும், ஓமலூர் ஊராட்சி ஒன்றியக் குழு  தலைவருமான எஸ்.எஸ்.கே.ஆர்.ராஜேந்திரன் கூறியது:  ஓமலூர் பகுதியில் ஆதரவற்றோர் முதியவர்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக சேவை செய்யும் நோக்கோடு, அரசு அனுமதியுடன் 45 ஆயிரம் சதுர அடியில் முதியோர் இல்லம் கட்டப்படும். ரூ.4.50 கோடி மதிப்பில் கட்டப்படும் இந்த முதியோர் இல்லத்தில் 140 பேர் தங்க முடியும்.  ஓமலூர் தாலுகாவில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் இறுதி காலத்தில் மகிழ்ச்சியாகக் கழிக்க இது பேருதவியாக இருக்கும் என தெரிவித்தார் .

ADVERTISEMENT

இதில், ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், மணிமுத்து, சுப்பிரமணியம், செங்குட்டுவன், முன்னாள் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய அவைத் தலைவர் பரமசிவம், கூட்டுறவு சங்கத்தலைவர்கள், பெரியசாமி, ராதா, பெரியேரிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ராமசாமி,  தாரமங்கலம் ஒன்றிய சேர்மன் சுமதி பாபு, ஓமலூர் ஒன்றிய துணைச் சேர்மன் செல்வி ராமசாமி, நகரச் செயலாளர் சரவணன், மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : old age home Omalur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT