தமிழ்நாடு

ஆறுகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடியும், வறண்டு கிடைக்கும் பாசன வாய்க்கால்கள்: விவசாயிகள் வேதனை

18th Oct 2020 05:15 PM | சோ. தெஷ்ணாமூர்த்தி

ADVERTISEMENT

கூத்தாநல்லூர்: கூத்தாநல்லூர் வட்டத்தில், வெண்ணாறு, கோரையாறு, வெள்ளியாறு, பாண்டவையாறு உள்ளிட்ட 4 ஆறுகள் ஓடுகின்றது. இதில், வெண்ணாறு மற்றும் கோரையாற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.

ஆனால், விவசாயத்திற்கு தண்ணீர் செல்லக் கூடிய பாசன வாய்க்கால்கள் வறண்டுள்ளது குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளரும், விவசாயியுமான எம்.சுதர்ஸன் கூறியது:

தமிழக அரசு ஆறுகளை தூர் வாரினர், ஆழப்படுத்தினர், அகலப்படுத்தினர். இரு கரைகளையும் உயர்த்தினர். ஆனால், ஆற்றிலிருந்து விவசாயத்திற்காக தண்ணீர் செல்லக் கூடிய பாசன வாய்க்கால்கள் தூர் வாரப்படவும் இல்லை. சுத்தப்படுத்தவும் இல்லை. கவனிப்பாரற்ற நிலையில்தான் உள்ளது.

கூத்தாநல்லூரைச் சுற்றியுள்ள தோட்டச்சேரி, கீழப்பனங்காட்டாங்குடி, மேலப்பனங்காட்டாங்குடி, குணுக்கடி, புளியங்குடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பாசன வாய்க்கால்கள் தூர்வாரி சுத்தம் செய்யப்படாததால், அப்பகுதிகளில் தண்ணீர் செல்ல முடியவில்லை. இதனால், விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள் இருந்தாலும், 350 ஏக்கர் நிலத்தில்தான் விவசாயம் செய்யப்படுகிறது. ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டாலும், வாய்க்கால்கள் வறண்ட நிலையில்தான் உள்ளன. ஆறுகளை தூர் வாரிய போதே, வாய்க்கால்களிலும் தூர்வாரி சுத்தம் செய்து இருந்தால், தற்போது ஆறுகளில் கூடுதலாக வரக்கூடிய தண்ணீர் விவசாயத்திற்கு பயன் பட்டிருக்கும்.

டெல்டா மாவட்டங்களை பாதுக்காக்கப்பட்ட விவசாய மண்டலங்களாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். ஆனால், விவசாயம் செய்யக் கூடிய விளை நிலங்களில், மனைப் பிரிவுகள் போடப்பட்டு விற்பனை செய்வதற்கு அதிகாரிகளின் உத்தரவும் வழங்கப்பட்டு வருகிறது. பாதுக்காக்கப்பட்ட விவசாய நிலங்கள் என அறிவிப்பிற்கு ஏற்றபடி, எந்தவிதப் பணிகளும் தொடங்கப்படவேயில்லை. மேலும், வயல்களில் விதை தெளிக்கப்பட்டுள்ளது. தெளிப்புக்கு டி.ஏ.பி. யூரியா உரம் வேண்டும்.
உரம் தட்டுப்பாடாக உள்ளது. தனியாரிடமும் உரம் இல்லை. வேளாண் துறையிடம் உரம் கிடையாது.

யூரியா தெளித்தால்தான் பயிர் வளரும். பயிர் வளர்ந்தால்தான் களை எடுக்க முடியும். களை எடுத்தப் பிறகு, டி.ஏ.பி. யூரியா தெளிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து பூச்சி மருந்தும் தெளிக்க வேண்டும். பூச்சி மருந்து இல்லை, உரம் இல்லை, யூரியா இல்லை. ஆற்றில் தண்ணீர் வந்தும் விவசாயத்திற்குப் பயன் இல்லை. பாசன வாய்க்கால்கள் தூர் வாரப்படவில்லை.

கடை மடை விவசாயிகள் நிலைமை சொல்ல முடியாத நிலைமையாக உள்ளது. உரங்களும், பூச்சி மிருந்துகளும், யூரியாக்களும் தனியாரிடம் இருந்தாலும், அதிக விலைக்கு விற்கப்படுகிறது. விவசாயிகளின் மனக்குமுறலையும், வேதனையையும் யாரிடம் போய்ச் சொல்வது எனத் தெரியவில்லை.

விவசாயிகளுக்கு வேலை இல்லை. வேலை தேடி வெளியூர் செல்லும் நிலையில்தான் விவசாயிகள் உள்ளனர். பாசன வாய்க்கால்களை தூர் வாரி சுத்தம் செய்யாததால், ஆற்றுத் தண்ணீர் கடை மடைக்குச் செல்ல முடியவில்லை. கூத்தாநல்லூர் நகராட்சி 30 கிராமங்களை உள்ளடக்கிய நகராட்சி. நகராட்சி என்பது கூட பொருந்தாது என்றுதான் சொல்ல வேண்டும். கிராமங்கள் அப்படியேதான் உள்ளது. சாலை வசதி இல்லை. குடிநீர் வசதி இல்லை. விவசாயம் என்பது நலிந்த நிலையில் உள்ளது. எந்த ஆண்டுதான் மனநிறைவோடு விவசாயம் செய்யப் போகிறோம் என்றே தெரியவில்லை என மன வேதனையுடன் தெரிவித்தார்.

Tags : கூத்தாநல்லூர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT