தமிழ்நாடு

குஜிலியம்பாறை சிட்கோ தொழில்பேட்டைக்கு மலைக் கரட்டில் மரங்கள் வெட்ட கடும் எதிர்ப்பு

17th Oct 2020 04:14 PM

ADVERTISEMENT

 

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அடுத்துள்ள ஆர்.கோம்பை பகுதியில் சிட்கோ தொழில்பேட்டை அமைக்கப்படும் என கடந்த 2013ஆம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

சிட்கோ தொழில்பேட்டை அமைப்பதற்கு போதிய இட வசதி இல்லாத காரணத்தால், அத்திட்டம் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், ஆர்.கோம்பை சீலக்கரடு பகுதியில் அமைந்துள்ள வருவாய்த்துறைக்குச் சொந்தமான சுமார் 57 ஏக்கர் நிலத்தில் சிட்கோ தொழில்பேட்டை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக சீலக்கரட்டுப் பகுதியில் மரங்களை அகற்றிவிட்டு பாதை அமைக்கும் பணி காவல்துறை பாதுகாப்புடன் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இத்திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி சீலக்கரடு பகுதிக்கு சனிக்கிழமை வந்தார். குழந்தைகளுடன் வந்து முறையிட்ட மக்களுடன் சேர்ந்து, நிலம் சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் இயந்திரத்தை மறித்து ஜோதிமணியும் அமர்ந்தார். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதனை அறிந்த ஆர்.கோம்பை ஊராட்சி மன்றத் தலைவர் மலர்வண்ணன் மற்றும் அதிமுகவினர், ஜோதிமணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கூட்டத்திலிருந்த ஒருவர் எம்பி ஜோதிமணியை ஒருமையில் பேசியதோடு, அங்குள்ள விவசாயிகளையும் மணல் திருடர்கள் எனக் கூறியதால் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அதனைத் தொடர்ந்து, அங்கிருந்த அதிமுகவினர் அந்த நபரை அழைத்துச் சென்றனர். பின்னர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் இயந்திரமும் வெளியேற்றப்பட்டது.

இதுதொடர்பாக ஜோதிமணி எம்பி கூறியதாவது:

குஜிலியம்பாறை பகுதியில் சமவெளிப் பகுதியில் 57 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவது எளிது. ஆனால், சீலக்கரட்டில் உள்ள மரங்களை அழித்து சிட்கோ அமைக்கும் முயற்சிக்கு, அங்குள்ள கிராவல் மண்ணே முக்கிய காரணம். கிராவல் மண் மூலமாக மட்டும் மேலும் இந்த மலை கரட்டில் கடந்த 1977 முதல் 22ஆயிரம் மரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த மரங்களை ரூ.36ஆயிரத்திற்கு ஏலம் எடுத்து ரூ.8.5 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர்.

இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் நிலையில், காவல் துறையினர் உதவியுடன், உள்ளூர் மக்களை மிரட்டி மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த மலை கரட்டில் வசித்து வந்த ஏராளமான மயில்கள் வெளியேறிவிட்டன. 

மரங்களை வெட்டுவதற்கு சிட்கோ அதிகாரிகள் அனுமதி கொடுத்ததாக போலியான அனுமதிச் சீட்டை வைத்துக் கொண்டு மரங்களை வெட்டியுள்ளனர். வேலைவாய்ப்பு அவசியம் என்றாலும், இயற்கை வளத்தை அழிக்கும் முடிவைக் கைவிட்டு சிட்கோ தொழில்பேட்டை அமைப்பதற்கு வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும். இல்லாதபட்சத்தில் தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT