தமிழ்நாடு

சொத்துவரி: வலது கையால் கொடுத்த சலுகையை இடது கையால் பறிப்பதா? ஸ்டாலின் கேள்வி

17th Oct 2020 03:18 PM

ADVERTISEMENT

 

சொத்து வரி குறித்து சென்னை மாநகராட்சி அறிவித்திருப்பது, “வலது கையால்” ஒரு சலுகையைக் கொடுத்து விட்டு,  “இடது கையால்” அதைப் பறித்துக் கொள்வது போல் அமைந்திருக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அரையாண்டுச் சொத்துவரி ரூ.5000-க்குள்  செலுத்துவோருக்கான  ஊக்கத்தொகையை 10% ஆக அதிகரித்தும், அரையாண்டு முடிந்து சொத்துவரி செலுத்துவோருக்கு ஊக்கத்தொகைக்கான கால  அவகாசத்தை 45 நாட்களாக அதிகரித்தும் சென்னை மாநகராட்சி அறிவிக்க வேண்டும் என்றும்.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,  “ஒவ்வோர் அரையாண்டும் முடிந்து 15 நாள்களுக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை”, “அப்படிச் செலுத்தத்  தவறினால் 16-ஆவது நாளில் இருந்து 2 சதவீதம் அபராதம் வசூலிக்கப்படும்” என்று, சென்னை மாநகராட்சி அறிவித்திருப்பது, “வலது கையால்” ஒரு சலுகையைக் கொடுத்து விட்டு,  “இடது கையால்” அதைப் பறித்துக் கொள்வது போல் அமைந்திருக்கிறது. 

ADVERTISEMENT

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, சில்லறை வணிகர்கள், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மட்டுமே நம்பியிருப்போர், இன்னும் வருமான ரீதியாக குடும்பச் செலவுகளைக் கூடச் சமாளிக்க இயலாமல்  நாள்தோறும் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே இதுபோன்ற சூழலில், முதல் அரையாண்டு சொத்து வரியை ஏப்ரல் 1 முதல் 15 தேதிக்குள்ளோ, இரண்டாவது அரையாண்டு வரியை அக்டோபர் 1 முதல் 15 தேதிக்குள்ளோ கட்டவில்லை என்றால், அவர்களுக்கு ஊக்கத்தொகை இல்லை என்பதும், அதுமாதிரி செலுத்தத் தவறியவர்கள் அபராதம் செலுத்த வேண்டும் என்பதும், சிறிதும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல !

ஏழை எளிய, நடுத்தர மக்கள் செலுத்தும் சொத்து வரியில், “அபராதம்” விதிக்கும் கெடுபிடியும் - ஊக்கத் தொகை 15 நாட்களுக்கு மட்டுமே அளிப்போம் என்பதும், மக்கள் நலத் திட்டம் அல்ல; மக்களை நச்சரிக்கும் திட்டமே ஆகும்!

எனவே, கொரோனா பேரிடர் பாதிப்புகளை  மனதில் வைத்து, ஒவ்வொரு அரையாண்டிற்கும் ஊக்கத் தொகை அளிக்க வழங்கப்பட்டிருக்கும் 15 நாள்கள் கால அவகாசத்தை, குறைந்த பட்சம் 45 நாள்களாக உயர்த்தி - அரையாண்டு வரி 5000 ரூபாய்க்குள் செலுத்துவோருக்கு இந்த ஊக்கத் தொகையை 10 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர்  பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல் தற்போதுள்ள 2 சதவீத அபராதத் தொகையை அரை சதவீதமாகக் குறைத்திட வேண்டும் அல்லது அறவே ரத்து செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : tax stalin DMK chennai chennai corporation
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT