தமிழ்நாடு

திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை கோயிலில் நவராத்திரி லட்சார்ச்சனை தொடக்கம்

17th Oct 2020 05:47 PM

ADVERTISEMENT

 

திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை கோயிலில் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு பத்து நாட்கள் நடைபெறும் லட்சார்ச்சனை சனிக்கிழமை தொடங்கியது.
 
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட பேரளம் அருகில் திருமீயச்சூரில், ஸ்ரீ வேளாக்குறிச்சி ஆதீனத்திற்குச் சொந்தமான, புகழ்பெற்ற ஸ்ரீலலிதாம்பிகை உடனுறை ஸ்ரீமேகநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த திருத்தலத்தில்தான் அனைத்து சக்தி தலங்களிலும் ஓதப்படும் ஸ்ரீலலிதாசகஸ்ரநாமம் உருவானது. திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற இத்தலம், சூரியன், அருணன், எமதர்மன், திருமால் ஆகியோர் வழிபட்ட சிறப்புப் பெற்ற ஸ்தலம். 

இத்திருக் கோயிலில், நவராத்திரி விழாவை  முன்னிட்டு, சனிக்கிழமை முதல் பத்து நாட்களுக்குத் தினசரி காலை மாலை இரு வேளைகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் லட்சார்ச்சனையும் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி முதல் நாளான சனிக்கிழமை காலை, அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை நடைபெற்றது. பின்னர் ஶ்ரீலலிதாம்பிகை அம்மனுக்கு, மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப் பொடி, இளநீர், எலுமிச்சம் பழம், நார்த்தம் பழம், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம் போன்ற அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்குத் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு ஆராதனை நடந்தது. 

பின்னர் நவராத்திரி உற்சவத்தையொட்டி லட்சார்ச்சனை, வேளாக்குறிச்சி ஆதீனம் முன்னிலையில் துவங்கி நடைபெற்றது. திருக்கோயில் பூஜைகள் அறநிலையத்துறை மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு நடைபெற்றது. பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் அம்மனை வழிபட்டனர். லட்சார்ச்சனையில் வேளாக்குறிச்சி ஆதீனம் பதினெட்டாவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு வழிபட்டார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT