தமிழ்நாடு

உச்சவரம்பின்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல்: ஸ்டாலின் வேண்டுகோள்

14th Oct 2020 03:16 PM

ADVERTISEMENT

 

சென்னை: உச்சவரம்பின்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக புதனன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“கொள்ளிடம் பகுதியில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டதால், 50 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்” என்றும்; “ எந்த ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும், 1000 மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்வதில்லை” என்றும்; தினமும் விவசாயிகள் அனுபவிக்கும் தீராத  இன்னல்களை, அ.தி.மு.க. அரசு இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பது  மிகுந்த கண்டனத்திற்குரியது.

ADVERTISEMENT

நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் முழுவதையும் கொள்முதல் செய்ய அரசு அதிகாரிகள் மறுத்து வருகிறார்கள். அறுவடை செய்த நெல்லைச் சேமித்து வைத்து விற்க விவசாயிகளுக்கு வாய்ப்பும் இல்லை; வசதிகளும் இல்லை. ஆகவே அறுவடை செய்தவுடன் நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்றால்தான் - அவர்களின் குறைந்தபட்ச வாழ்வாதாரமாவது தப்பிக்கும் என்ற சூழலில், அதிக எண்ணிக்கையில் நேரடிக் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாதது அ.தி.மு.க. ஆட்சியின் விவசாயிகள் விரோதப் போக்கிற்கான  அடையாளமாகும்.

மத்திய பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசும், வேளாண் விஞ்ஞானி திரு. எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் பரிந்துரைத்த “உற்பத்திச் செலவோடு 50 சதவீதம் கூடுதல் விலை கொடுக்க வேண்டும்” என்ற எண்ணம் கூட இல்லாமல் - இந்த ஆண்டு “பெயரளவுக்கு” ஒரு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்து - விவசாயிகளை மேலும் கவலைக் கிணற்றில் தள்ளி விட்டுள்ளன.

ஆகவே, விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை எவ்வித உச்சரவரம்பும் இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யவும்; அதற்கு ஏற்றவாறு அனைத்து இடங்களிலும் தேவையான  எண்ணிக்கையில் நேரடி கொள்முதல் நிலையங்களைத் திறக்கவும் முதலமைச்சர் திரு. பழனிசாமி உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

விவசாயிகளும் - விவசாயமும்தான் தமிழகத்தைத் தாங்கி நிற்கும் முக்கியத்தூண்கள் என்பதை இப்போதாவது உணர்ந்து - ஏற்கனவே அறிவித்துள்ள விலையை மறுபரிசீலனை செய்து - நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3000 ரூபாய் கிடைக்கும் அளவிற்கு - குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்திட வேண்டும்; நெல் விலையில் எந்தவிதக் கழிவும் செய்திட அனுமதிக்கக் கூடாது; என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT