தமிழ்நாடு

சொத்துவரி விவகாரம்: ரஜினியின் மனு தள்ளுபடி

14th Oct 2020 11:48 AM

ADVERTISEMENT

ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை ரஜினிகாந்த் வாபஸ் பெறுகிறார். 

ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ஏப்ரல்-செப்டம்பர் மாதத்திற்கு ரூ.6.50 லட்சம் சொத்து வரி விதித்து சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு எதிராக ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். 

மனுவில், கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் சொத்து வரி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், கரோனா நோய்த் தொற்று காரணமாக மார்ச் 24 -ஆம் தேதி முதல் என்னுடைய ராகவேந்திரா திருமணம் மண்டபத்தில் எந்த நிகழ்ச்சிகளும் நடைப்பெறவில்லை. இதனால் திருமண மண்டபத்தின் மூலம் எந்த வருமானமும் கிடைக்கவில்லை.இந்த நிலையில் திருமண மண்டபத்துக்கு சொத்து வரியாக ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம்   செலுத்த வேண்டும் என கடந்த செப்டம்பர் 10 -ஆம் தேதி சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸை வைத்து சொத்துவரிக்கு அபராதமோ, வட்டியோ விதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில், சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிய 10 நாள்களில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது ஏன்? சொத்து வரியை குறைக்கக் கோரி மாநகராட்சிக்கு அளித்த கடிதத்தின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கால அவகாசம் கொடுக்க வேண்டாமா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாகவும் கண்டித்தார்.

ADVERTISEMENT

மேலும் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்புவதை விடுத்து வழக்கு தொடர்ந்ததற்காக அபராதம் விதிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து வழக்கை வாபஸ் பெறப் போவதாக ரஜினிகாந்த் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்ய ரஜினிகாந்த் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.

இதையடுத்து, இன்று பிற்பகல் விசாரணையில் ரஜினிகாந்த் தரப்பில் மனுத் தாக்கல் செய்ததையடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : ரஜினிகாந்த்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT