தமிழ்நாடு

சுற்றுச்சூழல் இணை முதன்மைப் பொறியாளர் வீட்டில் ரூ. 33 லட்சம் பறிமுதல்

14th Oct 2020 10:24 AM

ADVERTISEMENT


வேலூர்: வேலூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் இணை முதன்மைப் பொறியாளர் பன்னீர்செல்வத்தின் தனிஅலுவலகம், கார் ஆகியவற்றில் இருந்து கணக்கில் வராத ரூ.33.73 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், காந்தி நகரில் தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் வேலூர் மண்டல அலுவலகம் செயல்படுகிறது. இதில் மாவட்ட சுற்றுச்சூழல் இணை முதன்மைப் பொறியாளராக பணியாற்றுபவர் பன்னீர்செல்வம் (51). ராணிப்பேட்டை சிப்காட் பகுதியைச் சேர்ந்த இவரது கட்டுபாட்டில் வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, ஓசூர், விழுப்புரம், வாணியம்பாடி ஆகிய 6 மாவட்டங்கள் உள்ளன. இவர் மீது தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட அங்கீகாரம் பெறுவதற்காக அதிகளவு லஞ்சம் பெற்று வந்ததாக புகார்கள் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், காந்தி நகரில் உள்ள அலுவலகத்தில் அங்கீகாரம் கோரி விண்ணப்பித்த மனுக்கள் மீதான பரிசீலனை குறித்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் லஞ்சப் பணம் பரிமாற்றப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. 

கூட்டத்தைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் காட்பாடி காந்தி நகரில் முனிசிபல் காலனி ஒன்றாவது வீதியில் உள்ள வாடகை வீட்டில் அவர் வழக்கமாக மேற்கொள்ளும் வகையில் கோப்புகளை கவனித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில், வேலூர் லஞ்ச ஒழிப்புதுறை காவல் துணை கண்காணிப்பாளர் ஹேமசித்ரா தலைமையில் ஆய்வாளர்கள் ரஜினி, விஜய், விஜயலட்சுமி உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரை பின்தொடர்ந்து சென்று முதலில் அந்த வாடகை வீட்டுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த பன்னீர்செல்வத்தின் காரை சோதனை செய்துள்ளனர். அதில், ரூ.2.50 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரது அலுவலகம் போல் செயல்படும் வாடகை வீட்டிலும் சோதனை நடத்தியதில் ரூ. 31. 23 லட்சம் என மொத்தம் ரூ. 33.73 லட்சம் கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக அவர் மீது துறைரீதியான விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தெரிவித்தனர். 

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மாசுக்கட்டுபாட்டு வாரிய பொறியாளரின் வீட்டில் இருந்து கணக்கில் வராத பெரிய தொகை பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அந்த துறையின் மற்ற அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chief Engineer
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT