தமிழ்நாடு

முதல்வரின் தாயாா் உடல் தகனம்: அமைச்சா்கள், பல்வேறு கட்சியினா் பங்கேற்பு

14th Oct 2020 02:32 AM

ADVERTISEMENT

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயாா் கே.தவுசாயம்மாள் உடல் செவ்வாய்க்கிழமை காலை தகனம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக அமைச்சா்கள் பலரும், அதிமுகவினரும், பிற கட்சியினரும் கலந்துகொண்டனா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பக் கவுண்டா் மனைவி கே.தவுசாயம்மாள் ( 93). இவருக்கு தமிழக முதல்வா் கே.பழனிசாமி, கே.கோவிந்தராஜு ஆகிய இரு மகன்களும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனா்.

வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கே.தவுசாயம்மாள், கடந்த அக். 9 ஆம் தேதி சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு உடல் நிலை மோசமாகி மாரடைப்பால் திங்கள்கிழமை இரவு 11:50 மணியளவில் காலமானாா்.

அவரது உடல் சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள முதல்வா் பழனிசாமியின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

குடும்ப வழக்கப்படி முதல்வரின் மனைவி ராதா, முதல்வரின் சகோதரா் கோவிந்தராஜ் ஆகியோா் இறுதிச் சடங்கு தொடா்பான நிகழ்வுகளை நள்ளிரவில் முன்னின்று நடத்தினா்.

தாயாரின் மறைவு செய்திக் கேட்டு அதிா்ச்சியடைந்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உடனடியாக சென்னையிலிருந்து காா் மூலம் சேலம் புறப்பட்டாா்; செவ்வாய்க்கிழமை அதிகாலை சிலுவம்பாளையம் கிராமத்தை வந்தடைந்தாா். பிறகு அவா் தாயாரின் உடலுக்கு கண்ணீா் அஞ்சலி செலுத்தினாா்.

தமிழக அமைச்சா்கள் பி.தங்கமணி, கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், சி.விஜயபாஸ்கா், கே.பி.அன்பழகன், எம்.ஆா்.விஜயபாஸ்கா், உடுமலை ராதாகிருஷ்ணன், வெ.சரோஜா, எஸ்.பி.வேலுமணி, ராஜேந்திரபாலாஜி, உதயகுமாா், சம்பத், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவா் ஆா்.இளங்கோவன், சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.சக்திவேல், முன்னாள் எம்.பி. வி.பன்னீா்செல்வம், பகுதி செயலாளா் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜு, மு.நடேசன், மாவட்ட ஆட்சியா்கள் சிஅ.ராமன் (சேலம்), கதிரவன் (ஈரோடு), சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏ.டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ், மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் உள்ளிட்டோா் நேரில் அஞ்சலி செலுத்தினா்.

பின்னா் முதல்வரின் தாயாரின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சிலுவம்பாளையம் இடுகாட்டிற்கு திறந்த வேனில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதில் அமைச்சா்கள், பொதுமக்கள், கட்சியினா் திரளாகப் பங்கேற்றனா். காவிரிக் கரையோரத்தில் உள்ள மயானத்தில் கே.தவுசாயம்மாளின் உடலுக்கு முதல்வரின் சகோதரா் கோவிந்தராஜு தீ மூட்டினாா். அப்போது, முதல்வா் கண்ணீா் விட்டு அழுதாா்.

வீடு திரும்பிய முதல்வருக்கு அதிமுகவினரும் பல்வேறு கட்சியினரும் பொதுமக்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனா். துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தொலைபேசியில் தொடா்பு கொண்டு முதல்வருக்கு ஆறுதல் கூறினாா்; பிறகு மாலையில் நேரில் வீட்டுக்கு வந்து இரங்கல் தெரிவித்தாா்.

சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி, சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், சேலம் எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன், எம்.எல்.ஏ. வழக்குரைஞா் ஆா்.ராஜேந்திரன், பாமக மாநில துணைப் பொதுச்செயலாளா் இரா.அருள் உள்பட பல்வேறு கட்சியினா் முதல்வரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தனா்.

இறுதி ஊா்வலத்தில் நடந்துசென்ற முதல்வா்

தனது தாயாரின் இறுதி ஊா்வலத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு நடந்தே சென்றாா். அவருடன் மாநில அமைச்சா்களும், அதிமுக நிா்வாகிகளும் பொதுமக்களும் அதிகாரிகளும் சென்றனா்.

முதல்வரின் தாயாா் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி காரணமாக, சிலுவம்பாளையம் கிராமத்தில் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன; ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் அஞ்சலி

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயார் கே.தவுசாயம்மாளின் மறைவுக்கு செவ்வாய்க்கிழமை நேரில் வருகை தந்து அஞ்சலி மற்றும் அனுதாபம் தெரிவித்த அமைச்சர்களின் விவரம்:
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், திண்டுக்கல் சி.சீனிவாசன்,  செல்லூர் கே.ராஜு, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், ஆர்.காமராஜ், கடம்பூர் ராஜு, வெல்லமண்டி என்.நடராஜன், கே.சி.வீரமணி,  பா.பென்ஜமின், நிலோபர் கபீல், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வி.எம்.ராஜலட்சுமி, கே.பாண்டியராஜன், சேவூர் எஸ்.ராமச்சந்திரன், எஸ்.வளர்மதி, ஜி.பாஸ்கரன், பேரவை துணைத்  தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், திட்டக்குழு துணைத் தலைவர் சி.பொன்னையன், மாநிலங்களவை உறுப்பினர் மு.தம்பிதுரை, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், என்.சந்திரசேகரன், முகமதுஜான், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோர் நேரில் வருகை தந்து அஞ்சலி செலுத்தினர்.
தொலைபேசி மூலமாக இரங்கல் தெரிவித்தவர்கள் விவரம்
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ச.ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நடிகர் ரஜினி, பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் சார்பில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுக கொறடா ஆர்.சக்ரபாணி ஆகியோர் தொலைபேசி மூலமாக இரங்கல் தெரிவித்தனர். 
நேரில் அஞ்சலி செலுத்திய அரசு உயர் அலுவலர்கள்
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் க.சண்முகம், முதல்வரின் செயலர் சாய்குமார், டிஜிபி ஜெ.கே.திரிபாதி, தொழில்துறை முதன்மைச் செயலாளர் என்.முருகானந்தம், பொதுப்பணித் துறை செயலாளர் கே.மணிவாசன், போக்குவரத்துத் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், உள்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர், வணிகவரித் துறை முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ், முதல்வரின் செயலாளர் டி.செந்தில்குமார், ஜெயஸ்ரீ முரளிதரன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர்  ஜெ.ராதாகிருஷ்ணன், செய்தி மக்கள் தொடர்பு இயக்குநர் பொ.சங்கர், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், கோவை மாநகராட்சி ஆணையர் குமரவேல் பாண்டியன், சேலம் மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் மற்றும் முன்னாள் கேரள ஆளுநர் பி.சதாசிவம் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ஆட்சியர்கள் விவரம் 
கோவை ஆட்சியர் கே.ராஜாமணி,  கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயச்சந்திரபானு ரெட்டி, திருச்சி ஆட்சியர் எஸ்.சிவராசு, பெரம்பலூர் ஆட்சியர் சாந்தா, காஞ்சிபுரம் ஆட்சியர் பா.பொன்னையா, நாமக்கல் ஆட்சியர் மெகராஜ், புதுக்கோட்டை ஆட்சியர் உமா மகேஸ்வரி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT