தமிழ்நாடு

புதிய வரலாறு படைப்போம்: முதல்வர் பழனிசாமி

7th Oct 2020 08:09 PM

ADVERTISEMENT


2021 பேரவைத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"எனக்குப் பின்னாலும் நூறு ஆண்டுகள் ஆனாலும் கழகம்தான் தமிழகத்தை ஆளும் என ஜெயலலிதா புனிதமிக்க சட்டப் பேரவையில் தன் கடைசி சூளுரையாய்  விடுத்துப்  போன சபதத்தை முன்னெடுத்து  நிறைவேற்றி  முடிப்பதற்கு, என்னை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்திருக்கும் கழக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும், தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பல்வேறு அணிகளைச் சார்ந்த நிர்வாகிகளுக்கும், கழகமே உலகமென வாழும் கழக உடன்பிறப்புகளுக்கும், இவ்வேளையில் என் நெஞ்சார்ந்த நன்றியை சமர்ப்பிக்கின்றேன்.
  
வெறும் எழுத்துக்களால் மட்டும் நான் உரைக்கும் நன்றி நின்று விடாது. 2021-லும் மூன்றாம் முறையாக ஆட்சியைத் தொடர்கிற அரசியல் புரட்சியை கழக உடன்பிறப்புகளாகிய உங்களின் ஒத்துழைப்போடு நான் நிறைவேற்றிக் காட்டுவேன் என்பது சத்தியம். 
 
எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனங்களின் உண்மைத்தன்மையை உரசிப் பார்த்து அவற்றில் உள்ள ஆக்கப்பூர்வங்களை நாம் ஏற்றுக் கொள்பவர்கள். 

அதே வேளையில் வழிசொல்ல மாட்டோம்; பழி மட்டுமே சொல்வோம் என்கிற உள்நோக்கத்திலான காழ்ப்புணர்ச்சி குற்றச்சாட்டுகளை நாம் கடந்து செல்லக் கூடியவர்கள். 
    
நமது இலக்கும், நமது லட்சியமும் மக்களின் வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் மட்டுமே உரியது. இதனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு உழைக்கும் நம்மை தமிழக மக்கள் உளமார ஆதரிக்கிறார்கள்.  நாளையும் ஆதரிப்பார்கள். 
    
எனவே, நம்பிக்கையோடு நம் பாதங்களை முன்வைப்போம், பயணத்தை முன்னெடுப்போம். 

ADVERTISEMENT

“நாளைத் திருநாடு நமதடா, 
நாம் இனிமேல் தோளை சதைச்சுமையாய் தூக்கித் திரியோமே” 

என்னும் திடத்தோடும், தீர்க்கத்தோடும் பாடுபடுவோம். 
    
பெட்டிப் பணத்தை கொட்டி வைத்துக்கொண்டு இரக்கமற்ற அரக்கத் தனத்தோடும், இரவல் மூளைகளோடும் அதிகாரப் பித்துப் பிடித்து அலைவோரை வென்றெடுக்க ஒற்றுமையாய் அரண் அமைப்போம்.  ஓர் குரலாய் அணி வகுப்போம்.
    
“தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே” என்னும் எம்ஜிஆர்-இன் பொன்மொழிகளை மனதில் ஏற்று தினம் பாடுவோம்.  
     
வழியெங்கும் வாகை நமக்காகக் காத்திருக்கிறது.  திசையெங்கும் கிழக்காகும் தித்திப்பு காலம் நமக்காக பூத்திருக்கிறது. 
    
இதற்காக குருதியிலே உறுதி கலந்து உழைப்போம். 2021-லும் ஜெயலலிதா லட்சிய அரசை புனித ஜார்ஜ் கோட்டையிலே மீண்டும் படைப்போம்."

Tags : TN CM
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT