தமிழ்நாடு

ஆன்லைனில் வாடிக்கையாளர் சேவை எண்ணைத் தேடும் போது கவனிக்க..

7th Oct 2020 02:40 PM

ADVERTISEMENT


சென்னை: பொதுவாக ஏதேனும் ஒரு சேவையைப் பெறும்போது ஏற்படும் குளறுபடிகள் குறித்து புகார் அளிக்கவோ, விவரங்களை கேட்டறியவோ அந்த சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணை கூகுள் தேடுபொறியில் தேடுவது அனைவருக்கும் கைவந்த கலைதான்.

ஆனால், கூகுள் தேடுபொறியில் கிடைக்கும் அனைத்து எண்களுமே சரியானதா? அது அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்தானா? அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்துதான் வடிக்கையாளர் எண்ணை எடுத்துள்ளீர்களா என்று எப்போதாவது யோசித்திருப்போமா? ஆராய்ந்திருப்போமா? என்ன இத்தனைக் கேள்விகளை எழுப்புகிறோம் என்று பார்க்கிறீர்களா? ஆம்.. கேள்விகளால் துளைக்கப்பட வேண்டியதுதான் இந்த விஷயம். அவ்வாறு யோசிக்காமல் செய்யும் சின்ன தவறும் பெரிய நஷ்டத்தில் கொண்டு போய் முடியும்.

அதாவது கூகுளில் நாம் ஒரு தகவலைத் தேடும்போது, அது பல இணையதளங்களைப் பட்டியலிடும். அதில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தைக் கண்டுபிடித்து பயன்படுத்த வேண்டியது வாடிக்கையாளராகிய நமது அடிப்படை கடமை. இதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை எண்ணை மட்டுமே நாம் தொடர்பு கொண்டு, புகார்களை பதிவு செய்யலாம். இல்லையேல், மற்றொரு புகாரைப் பதிவு செய்ய காவல்துறையின் புகார் பதிவு செய்யும் எண்ணையும் அதே கூகுளில் தேட நேரிடலாம்.

ஏன் இவ்வளவு சுற்றி வளைத்து சொல்கிறோம் என்று கேட்பவர்களுக்கு, சென்னை சைபர்கிரைம் காவல்துறை வெளியிட்டிருக்கும் ஒரு செய்திக் குறிப்பில் இருக்கும் தகவல்களை சொன்னால் நிச்சயம் எளிதாக விளங்கும் என்று நினைக்கிறோம்.

ADVERTISEMENT

அதாவது, சென்னை, பெருநகரில், நடைபெறும் சைபர்கிரைம் குற்றங்களை தடுக்கும் பொருட்டு சென்னை காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் குற்றங்களை விசாரிப்பதற்கென்றே மாவட்டம்தோறும் புதிதாக சைபர்கிரைம் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.அடையாறு துணை ஆணையாளர் விக்ரமன் கட்டுப்பாட்டில் அடையாறு துணை ஆணையாளர் அலுவலகத்தில் சென்னை மாவட்ட சைபர்கிரைம் பிரிவு இயங்கி வருகிறது.

கடந்த 19.09.2020 தேதி அன்று திருவள்ளுவர் நகரில் வசித்துவரும் விசாலாட்சி என்பவர் அடையாறில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருந்த போது உடன் பணியாற்றும் நண்பரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு ஏர்டெல் செயலியில் ரீசார்ஜ் செய்தபோது ரீசார்ஜ் ஆகாமல் பணம் மட்டும் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

உடனே கூகுள் வலைதளத்தில் வாடிக்கையாளர் சேவை (கஸ்டமர் கேர்) எண்ணை தேடியதில் கிடைத்த ஏதோ ஒரு எண்ணை தொடர்பு கொள்ள அதில் பேசிய நபர் ஒருவர் ரீசார்ஜ் பணத்தை திரும்ப செலுத்துவதாகவும் அதற்குதான் குறிப்பிடும் வேறு ஒரு அப்ளிகேசனை பதிவிறக்கம் செய்து அதில் ரூ.10க்கு ரீசார்ஜ் செய்தால் பணம் திரும்ப வங்கிகணக்கில் செலுத்தப்படும் என தகவல் தெரிவிக்க அதை நம்பிய புகார்தாரர் ஏர்டெல் பெயரில் இருந்த செயலியில் சோதனைக்காக ரூ.10 ரீசார்ஜ் செய்து அதற்கு தன்னுடைய வங்கி விபரங்களையும் ஓடிபி எண்ணையும் உள்ளீடு செய்துள்ளார். ஆனால் அவரது வங்கிக் கணக்கில் இருந்து அப்போது ரூ.49,999 மற்றும் ரூ.25000 என அடுத்தடுத்து இருமுறை மொத்தம் ரூ.74,999 பணம் டெபிட் செய்யப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியை உடனே வங்கிக் கணக்கை பிளாக் செய்துவிட்டு விரைந்து அடையாறு மாவட்டம் துணை ஆணையாளர் விக்ரமன் அவர்களிடம் புகார் அளித்தார். 

விசாரணையில் வங்கி பணப்பரிவர்த்தணைகளிலிருந்து ஏமாற்றப்பட்டது உண்மை என தெரியவந்தது. புகார்தாரரின் சேமிப்பு கணக்கு உள்ள கனரா வங்கி கஸ்தூரிபா நகர் கிளையில் இருந்து தகவல்களை பெற்றதில் பணமானது ரேஸோர்பே என்ற வால்லெட்டுக்கு மாற்றப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவல்களை அன்றைய தினமே ரோஸர்பே நோடல் அதிகாரி அவர்களுக்கு அனுப்பி புகார்தாரரின் பணத்தை மீட்டுதர வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட்டது. 

சைபர்கிரைம் பிரிவின் துரித நடவடிக்கையால் ரோஸர்பே வால்லெட்டில் இருந்து எதிரியின் வங்கி கணக்கிற்கு பணம் செல்லும் முன்னரே தடுத்து நிறுத்தப்பட்டு இழந்த பணத்தை மீட்டு மீண்டும் புகார்தாரரின் வங்கிகணக்கில் ரூ.44,750 மற்றும் ரூ.25000 ஆக இரண்டு தவணைகளாக மொத்தம் ரூ.69,750- மீண்டும் சேர்க்கப்பட்டது. தான் இழந்த பணத்தை மீட்டு கொடுத்த மகிழ்ச்சியில் பள்ளி ஆசிரியையான புகார்தாரர் காவல் துறையினருக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

அதேவேளையில், பொதுமக்கள் வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி போன்ற சேவைகளுக்கு அந்நிறுவனம் மற்றும் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வலைதளங்களில் குறிப்பிட்ட புகார் தொடர்பு எண்களை மட்டுமே தொடர்பு கொள்ளுமாறும் தேவையற்ற அங்கீகரிக்கபடாத கூகுள்  வலைதளங்களில் பொதுவாக கிடைக்கும் எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம் என சைபர்கிரைம் காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, வாடிக்கையாளர் சேவை எண்களை தேடும் போது இந்த முக்கிய தகவலை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

 

Tags : Computer cyber crime police
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT