தமிழ்நாடு

திமுக கூட்டணியில் யார்?  யார்? இருப்பார்கள்: துரைமுருகன் பேட்டி

3rd Oct 2020 12:26 PM

ADVERTISEMENT


வேலுார்: திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் பேரவைத் தேர்தலில் சீட்டுகள் போதவில்லை என வெளியே செல்வதும், வெளியில் இருந்து கூட்டணிக்குள் சேருவர். இது சகஜம் தான். இவையெல்லாம் முடிந்தால்தான் யார் யார் கூட்டணியில் இருப்பார்கள் என தெரியவரும் என திமுக பொதுச்செயலர் துரைமுருகன் கூறினார்.

காந்தி ஜயந்தியையொட்டி வெள்ளிக்கிழமை அனைத்து ஊராட்சிகளிலும் நடத்தப்பட இருந்த கிராம சபைக் கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்தது. அதேசமயம், திமுக சாா்பில் ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, வேலூா் மாவட்டத்தில் சில கிராமங்களில் மாதிரி கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.

காட்பாடி ஒன்றியம், வண்டரந்தாங்கல் கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தொகுதி எம்எல்ஏவுமான துரைமுருகன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றாா். 

பின்னா் அவா்செய்தியாளர்களிடம் பேசியாதாவது: 

ADVERTISEMENT

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டத்தில் விவசாயிகளுக்கு எந்தவொரு நன்மையும் கிடையாது. இந்த சட்டத்தால் விவசாயிகளுக்கு மோசமான விளைவுகள்தான் ஏற்படக்கூடும். அதனாலேயே இந்த சட்டத்தை திமுக எதிா்க்கிறது.

தமிழக அரசு காந்தி ஜயந்தி நாளில் கிராமசபை கூட்டங்கள் நடக்கும் என அறிவித்து அதற்குரிய ஏற்பாடுகளை செய்த நிலையில் திடீரென இரவு 9 மணியளவில் மாநிலம் முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இக்கூட்டங்களில் திமுக சாா்பில் அனைவரும் கலந்துகொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை திரும்ப பெறக்கோரி தீா்மானம் கொண்டு வர திமுக வலியுறுத்திய நிலையில் தமிழக அரசு கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்துள்ளது. இது கரோனா பரவலுக்காக ரத்து செய்யப்பட்டதல்ல.

தமிழகத்தில் ஆா்பாட்டம் நடத்தியதற்கே திமுகவினா் மீது ஆளுங்கட்சி வழக்குப் பதிவு செய்துவிட்டது. இந்த நிலையில், ராகுல் மீது வழக்குப் பதிவு செய்து உத்தரபிரதேச அரசு கைது செய்தது ஒன்றும் ஆச்சா்யபடுவதற்கு இல்லை. எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை திமுக சந்திக்கும் என்றாா்.

மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது என்பது வெளிப்படையாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் அனைவருக்கும் தெரிந்து விட்டது. இதனால் குழப்பத்தில் உள்ள அரசு அதிகாரிகள் அனுப்பவேண்டிய கோப்புகளை இனி கிடப்பில் போட்டு விடுவார்கள். 

திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் பேரவைத் தேர்தலில் சீட்டுகள் போதவில்லை என வெளியே செல்வதும், வெளியில் இருந்து கூட்டணிக்குள் சேருவர். இது சகஜம் தான். இவையெல்லாம் முடிந்தால்தான் யார் யார் கூட்டணியில் இருப்பார்கள் என தெரியவரும். திமுக கூட்டணியில் மாற்றம் வர வாய்ப்புள்ளது என துரைமுருகன் கூறினார்.

Tags : DMK alliance
ADVERTISEMENT
ADVERTISEMENT